இலங்கையைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில், தனது சுழற் பந்து வீச்சால் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனைக்குச் சொந்தக்காரர். டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே 800 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன் காரணமாக இவரின் பயோபிக் திரைப்படத்துக்கு 800 என்று தலைப்பிடப்பட்டுள்ளது. 

முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையாக வைத்து எடுக்கப்படும் இப்படத்தை எம்.எஸ்.ஶ்ரீபதி இயக்குகிறார். முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவிருந்தார். கடந்த ஆண்டே இது தொடர்பான தகவல்கள் வெளியான போதும், அதிகாரப்பூர்வமாக படத்தின் மோஷன் போஸ்டர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியாக, சர்ச்சை வெடித்தது. 

ஈழத் தமிழர்களையும் தமிழக மீனவர்களையும் கொன்று குவித்த நாடான இலங்கையின் தேசியக் கொடி கொண்ட கிரிக்கெட் ஜெர்ஸியை எப்படி விஜய் சேதுபதி அணிந்து கொண்டு நடிக்கலாம் ? என்று கேள்விகளை எழுப்பி நெட்டிசன்கள் பலரும் கடுமையான விமர்சனங்களையும் எதிர்ப்பையும் ட்விட்டரில் பதிவு செய்து வருகின்றனர். 

தமிழ் திரைப்பட துறையை சேர்ந்த பலரும் விஜய் சேதுபதி இந்த கதாப்பாத்திரத்தில் நடிப்பது குறித்து மீண்டும் ஆலோசிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். இதனிடையே தனக்கு நெருக்கமான இயக்குனர்களிடம் விஜய் சேதுபதி ஆலோசனை கேட்டுள்ளதாகவும் ஒரிரு நாளில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், இலங்கை ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் விஜய் சேதுபதி இந்த படத்தில் நடிப்பது குறித்து பேசியுள்ளார். 800 திரைப்படம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், 800 திரைப்படத்தில் நடிப்பதில் உறுதியாக இருக்கிறேன். 800 திரைப்படம் நிச்சயமாக வெளிவரும். திரைப்படத்திற்கு எதிராக பேசுவோருக்கெல்லாம் அந்தத் திரைப்படமே பதில் சொல்லும்.

எல்லா விஷயத்திலும் ஒவ்வொருவருக்குய் ஒவ்வொரு பார்வை இருக்கும். முரளிதரன் வாழ்க்கை வரலாறு படம் நல்ல கதை, அதில் நடிப்பதில் இருந்து பின்வாங்கப்போவதில்லை என கூறியதாக தகவல் வெளியானது. எனினும், இது தற்போது விஜய் சேதுபதி அளித்த பேட்டி இல்லை என்ற தகவலும் வெளியானது.

இந்த நிலையில் முத்தையா முரளிதரன் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஒரு கோரிக்கை வைத்திருக்கிறார், அதில், எனது சுயசரிதை படமான 800 திரைப்படத்தை சுற்றி தமிழ்நாட்டில் சிலரால் ஏற்படுத்தப்பட்டுள்ள சர்ச்சைகள் காரணமாக இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்.

என் மீது உள்ள தவறான புரிதலால் 800 படத்திலிருந்து விலக வேண்டும் என நடிகர் விஜய் சேதுபதி அவர்களுக்கு சிலர் தரப்பிலிருந்து கடுமையான அழுத்தம் தருவதை நான் அறிகிறேன். எனவே என்னால் தமிழ்நாட்டின் ஒரு தலை சிறந்த கலைஞன் பாதிப்படைவது நான் விரும்பவில்லை. அதுமட்டுமல்லாது விஜய் சேதுபதி அவர்களின் கலைப்பயணத்தில் வரும் காலங்களில் தேவையற்ற தடைகள் ஏற்பட்டு விடக்கூடாது என்பதையும் கருத்தில் கொண்டு திரைப்படத்தில் இருந்து விலகிக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்,

ஒவ்வொரு முறை எனக்கு ஏற்படும் தடைகளால் ஒருபோதும் நான் சோர்வு அடைவதில்லை. அதை அனைத்தையும் எதிர்கொண்டு வென்று இந்த நிலையை என்னால் எட்ட முடிந்தது. இத்திரைப்படம் எதிர்கால தலைமுறையினருக்கும் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கும் ஒரு உத்வேகத்தையும் மன உறுதியையும் அளிக்கும் என எண்ணிய எனது சுய சரிதையை திரைப்படமாக சம்மதித்தேன். அதற்கும் இப்போது தடைகள் ஏற்பட்டு இருக்கிறது நிச்சயமாக இந்த தடைகளையும் கடந்து இந்த படைப்பை அவர்களிடத்தில் கொண்டு சேர்ப்பார்கள் என நம்புகிறேன். இதற்கான அறிவிப்பு விரைவில் வரும் என தயாரிப்பு நிறுவனம் என்னிடம் உறுதி அளித்துள்ளார். அவர்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருப்பேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இத்தகைய சூழலில் எனக்கு ஆதரவு தெரிவித்த அனைத்து பத்திரிகை ஊடக நண்பர்களுக்கும் அரசியல் பிரமுகர்களுக்கும் தமிழ் திரைப்பட கலைஞர்களுக்கு விஜய் சேதுபதியின் ரசிகர்களுக்கும் பொது மக்களுக்கும் குறிப்பாக தமிழக மக்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார். 

முத்தையா முரளிதரனின் இந்த அறிக்கைக்கு பதிலளித்துள்ள நடிகர் விஜய் சேதுபதி, நன்றி.. வணக்கம் எனக் குறிப்பிட்டுள்ளார். இதனால் விஜய் சேதுபதி இந்த படத்தில் இருந்து விலகும் முடிவை எடுத்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.