மக்களின் ஆதர்ஷ நாயகனாக திகழ்பவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. ஹீரோவாக பல படங்களில் பிஸியாக இருக்கும் விஜய் சேதுபதி, தனக்கு பிடித்த கதாபாத்திரங்கள் கிடைத்தால் வயதான கேரக்டராக இருந்தாலும் சரி மற்ற பெரிய நடிகர்களுடன் இணைந்து நடிக்கவும் தயங்குவதில்லை. 

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், மெகாஸ்டார் சிரஞ்சீவி, மாதவன், கெளதம் கார்த்திக், சிலம்பரசன், அரவிந்த் சுவாமி, ஜெயராம் என்று பல பெரிய நடிகர்களுடன் போட்டி போட்டு நடித்துள்ளார் விஜய் சேதுபதி.சமீபத்தில் இவர் தளபதி விஜயுடன் இணைந்து நடித்த மாஸ்டர் படம் வெளியாகி வெற்றிநடை போட்டது.

தமிழில் லாபம், யாதும் ஊரே யாவரும் கேளிர், துக்ளக் தர்பார் உள்ளிட்ட படங்களை முடித்துவிட்டார் விஜய் சேதுபதி. இதற்கான டப்பிங் பணிகளையும் முடித்துக் கொடுத்துவிட்டார். இதனைத் தொடர்ந்து பொன்.ராம் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கத் தேதிகள் ஒதுக்கினார் விஜய் சேதுபதி.

இந்தப் படத்தின் தயாரிப்பாளர், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த எந்தவொரு அறிவிப்புமே இல்லாமல் இருந்தது. தற்போது இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. பொன்.ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இதில் விஜய் சேதுபதியுடன் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பது அறிவிக்கப்படவில்லை. ஒளிப்பதிவாளராக தினேஷ் கிருஷ்ணன், இசையமைப்பாளராக இமான், எடிட்டராக விவேக் ஹர்ஷன் உள்ளிட்டோர் தொழில்நுட்பக் கலைஞர்களாக பணிபுரியவுள்ளனர்.

இந்தப் படத்துக்காக வெளியிடப்பட்டுள்ள ப்ரோமோ வீடியோவின் மூலம், இதில் விஜய் சேதுபதி காவல்துறை அதிகாரியாக நடிக்கவுள்ளார் என்பது தெளிவாகிறது. 

இயக்குனர் பொன்ராம் தற்போது சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள எம்ஜிஆர் மகன் படத்தை இயக்கி முடித்துள்ளார் என்பதும்,அது மார்ச் 23-ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதும் குறிப்பிடத்தக்கது. சசிகுமார் ஜோடியாக மிர்னாலினி ரவி நடித்துள்ளார். சமுத்திரக்கனி முக்கிய ரோலில் நடித்துள்ளார்.