மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அடுத்து நடித்து வரும் புதிய திரைப்படத்தின் ருசிகர தகவல் வெளியானது. சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், மற்றும் சீமராஜா ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்து வருகிறார்.

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தயாரிப்பில் உருவாகும் இந்த புதிய திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி காவல்துறை அதிகாரியாக நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய் டிவி குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த புகழ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கலகலப்பான கமர்சியல் ஃபேமிலி என்டர்டெய்னர் திரைப்படங்களை கொடுப்பதில் வல்லவரான இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் தயாராகும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் டி இமான் இசையமைத்துள்ளார். பிரபல மாடல் அழகியான அனுகிரீதி வாஸ் முதல்முறையாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் இணைந்து கதாநாயகியாக நடிக்கிறார். 

பரபரப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இதுகுறித்து நடிகை அனுகிரீதி வாஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். விரைவில் VJS46 படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்புகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.