தமிழ் சினிமாவின் மிக முக்கிய கதாநாயகர்களில் ஒருவராக விளங்கும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அடுத்ததாக உலக நாயகன் கமல்ஹாசனுடன் இணைந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் விக்ரம் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரியுடன் இணைந்து விடுதலை, இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா மற்றும் சமந்தாவுடன் காத்து வாக்குல ரெண்டு காதல் மற்றும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் புதிய படம் என விஜய் சேதுபதி அடுத்தடுத்த திரைப்படங்கள் வெளிவர உள்ளன.

முன்னதாக காக்கா முட்டை பட இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த கடைசி விவசாயி திரைப்படம் இடைவெளிக்குப்பிறகு ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில், இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள மாமனிதன் திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த முக்கிய தகவல் இப்போது வெளியாகியுள்ளது.

விஜய்சேதுபதி,காயத்ரி,குரு சோமசுந்தரம்,ஷாஜி சென்,அனிகா மற்றும் ஜுவல் மேரி ஆகியோர் நடித்துள்ள மாமனிதன் படத்தை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தயாரிக்க, இளையராஜா, யுவன் சங்கர் ராஜா மற்றும் கார்த்திக் ராஜா இணைந்து இசையமைத்துள்ளனர். M.சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் இயக்குனர் சீனு ராமசாமி தன் ட்விட்டர் பக்கத்தில், “37 நாள் படப்பிடிப்பில் உருவான மாமனிதன் திரைப்படம்... எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் அவர்களும் நானும் படத்தை எடிட்டிங் செய்து இனிதே மற்ற பணிகளும் நிறைவடைந்து காத்திருக்கிறது... அடுத்த வாரம் சென்சார் போகிறது!” மாமனிதன் என தெரிவித்துள்ளார் எனவே விரைவில் மாமனிதன் திரைப்படம் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.