தனது குரலால் உலகையே வசப்படுத்தியவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். இசை பிரியர்களின் உலகமான எஸ்.பி.பி, சில நாட்கள் முன்பு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து கடந்த 5ம் தேதி சென்னையில் இருக்கும் எம்.ஜி.எம். மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர். தனக்கு கொரோனாவின் அறிகுறிகள் தீவிரமாக இல்லை என்றாலும் தான் குடும்பத்தாரின் நலன் கருதி மருத்துவமனைக்கு வந்ததாகவும் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.

பின்னர், அவரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ள செய்தியை அறிந்ததும் கோடிக்கணக்கான ரசிகர்களும் பிரபலங்களும் சோகத்தில் ஆழ்ந்தனர். செயற்கை சுவாசக் கருவிகள் உதவியால் தான் எஸ்.பி. பாலசுப்ரமணியம் இயங்கி வருகிறார் என்ற செய்தி இடியாய் பலரது இதயங்களிலும் இறங்கியது. கொரோனாவுடன் கடுமையான போராட்டம் நடத்தி வந்த நிலையில், தற்போது 90 சதவீதம் மயக்க நிலையில் இருந்து மீண்டுள்ளார் என்ற நற்செய்தியை அவரது மகன் எஸ்.பி.சரண் கூறியிருந்தார்.

16 மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள இசை அரசன் பாடு நிலா பாலு உடல் நலம் பெற்று குணமாக வேண்டும் என பிரபலங்களுடன் பல்லாயிரக் கணக்கான மக்கள் ஒன்று திரண்டு, வீதிகளில் மெழுகுவர்த்தி ஏந்தி மிகப்பெரிய பிரார்த்தனையை நடத்தினர்.

இந்நிலையில், மீண்டும் ஒரு மாஸ் பிரார்த்தனையை நடத்த பிரபலங்கள் முடிவு செய்துள்ளனர். இன்று மாலை 6 மணி முதல் 6.05 வரை எஸ்.பி. பாலசுப்ரமணியம் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என மக்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும் என #LetsprayforSPB என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி வெங்கட் பிரபு, விஜய்சேதுபதி, யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட பிரபலங்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இதுகுறித்து விஜய்சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில், எஸ்.பி.பி-காக பிரார்த்திப்போம் என்று பதிவு செய்து, அதில் விரைவில் திரும்பி வாங்க சார் என்று கேப்ஷன் செய்துள்ளார். மக்கள் விரும்பும் மக்கள் செல்வனாக திகழ்பவர் விஜய் சேதுபதி. கமர்சியல் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்தாலும், வில்லன் ரோல், வித்தியாசமான கதை, வித்தியாசமான கதாபாத்திரம் என தேர்ந்தெடுத்து நடிப்பதிலும் குறை வைக்காமல் அசத்தி வருகிறார் விஜய் சேதுபதி.