தொலைக்காட்சி நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி மாரடைப்பு ஏற்பட்டு கடந்த இரண்டு வாரங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு 45 வயது மட்டுமே ஆகும் நிலையில் திடீரென மரணம் அடைந்திருப்பது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ரசிகர்கள் மட்டும் இன்றி சினிமா மற்றும் சின்னத்திரை நட்சத்திரங்கள் பலரும் சமூக வலைதளங்களில் வடிவேல் பாலாஜி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி இன்று காலை நேரில் சென்று வடிவேல் பாலாஜியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியிருக்கிறார். சென்னை சேத்துப்பட்டில் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு விஜய் சேதுபதி அஞ்சலி செலுத்தி இருக்கிறார் புகைப்படங்களும் வெளியாகி இருக்கிறது.

வடிவேல் பாலாஜி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய விஜய் சேதுபதி, அவர்களுக்கு நிதி உதவியும் வழங்கி இருக்கிறார். கொரோனா காலகட்டத்தில் பிரபலங்கள் அனைவரும் சமூக வலைத்தளங்கள் மூலமாகவே இரங்கல் தெரிவித்து வரும் சூழ்நிலையில், விஜய் சேதுபதி நேரில் வந்து இருப்பது அனைவரையும் உருக்கம் அடைய வைத்துள்ளது.

மறைந்த வடிவேல் பாலாஜிக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் கை செயலிழந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து சிகிச்சை அளிக்க பணம் இல்லாத காரணத்தினால் அவரை அரசு மருத்துவனைக்கு மாற்றி இருக்கிறார்கள். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். வடிவேல் பாலாஜிக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.

வடிவேலு போல நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்த பாலாஜியின் டைமிங் காமெடிக்கு அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள். வடிவேலு போன்ற கெட்டப்பில் அவர் செய்யும் காமெடி மற்றும் ரியாக்‌ஷன்கள் நம்மை வயிறுக் குலுங்க சிரிக்க வைத்திருக்கிறது. டிவி நிகழ்ச்சிகள் மட்டுமின்றி சில திரைப்படங்களிலும் வடிவேல் பாலாஜி நடித்துள்ளார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா படத்திலும் முக்கிய ரோலில் வந்து அசத்தினார்.