மக்கள் விரும்பும் மக்கள் செல்வனாக திகழ்பவர் விஜய் சேதுபதி. கமர்சியல் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்தாலும், வில்லன் ரோல், வித்தியாசமான கதை, வித்தியாசமான கதாபாத்திரம் என தேர்ந்தெடுத்து நடிப்பதிலும் குறை வைக்காமல் அசத்தி வருகிறார் விஜய் சேதுபதி. இந்த லாக்டவுனில் இயக்குனர் நலன் குமாரசாமியுடன் இணைந்து புது ஜானரில் ஒரு ஹேங்கவுட் படத்தில் நடிக்கவுள்ளார். 

சேது தனது திரைப்பயணத்தில் விஜய்சேதுபதி எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக நுழைந்து, குறும்படங்களில் நடித்து, சின்ன சின்ன கேரக்டரில் நடித்து தனது கடின உழைப்பால் மக்கள் விரும்பும் மக்கள் செல்வனாக உயர்ந்துள்ளார் விஜய்சேதுபதி. அவர் ஹீரோவானாலும் அவரது பெயரை கொண்டு வேறு படங்களுக்கு போஸ்டர்களை வெளியிடுவது, அவரை வைத்து ப்ரோமோஷன் தேடுவது போன்ற வேலைகள் நடைபெறுவதை கண்டிருக்கிறோம். இதுபோன்ற செயல்கள் குறித்து பல மேடைகளில் பல இடங்களில் பேசியுள்ளார் விஜய்சேதுபதி. 

தற்போது ARK ராஜ ராஜா எனும் ஒருவர் விஜய்சேதுபதி வைத்து படம் தயாரிக்கப்போவதாக இணையத்தில் பதிவு செய்துள்ளார். இச்செய்தி முற்றிலும் தவறு என விஜய்சேதுபதி தரப்பினர் தெளிவு செய்துள்ளனர். ARK ராஜ ராஜா என்பவர், மலையாளத்தில் வெளியான மார்க்கோனி மத்தாய் எனும் படத்தின் தமிழ் டப்பிங் உரிமையை பெற்றவர் ஆவார். மலையாளத்தில் வெளியான படத்திலேயே விஜய் சேதுபதி கெளரவ தோற்றத்தில் நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுமட்டுமல்லாமல் தனது அடுத்த படம் நடிகர் அதர்வா உடன் என்று சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார் ARK ராஜ ராஜா. 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் இணைந்து நடித்துள்ள விஜய் சேதுபதியின் நடிப்பை காண ஆவலாக உள்ளார் அவரது ரசிகர்கள். XB பிலிம்ஸ் தயாரித்த மாஸ்டர் படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகளை துவங்கியுள்ளனர் படக்குழுவினர். அனிருத் இசையில் பாடல்கள் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. கொரோனா ஊரடங்கால் மாஸ்டர் ரிலீஸை தள்ளிப்போடும் நிலை உருவானது. இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ளார் விஜய்சேதுபதி. 

சமீபத்தில் துக்ளக் தர்பார் படத்தின் பிரத்தியேக புகைப்படங்கள் வெளியானது. டெல்லி பிரசாத் தீனதயாளன் இந்த படத்தை இயக்கியுள்ளார். இது தவிர்த்து மணிகண்டன் இயக்கிய கடைசி விவசாயி, சீனு ராமசாமியின் மாமனிதன், விருமாண்டியின் க.பெ. ரணசிங்கம், வெங்கட கிருஷ்ணா ரோகந்தின் யாதும் ஊரே யாவரும் கேளிர், அல்லு அர்ஜூனுடன் புஷ்பா, அமீர்கானுடன் லால் சிங் சத்தா போன்ற படங்கள் விஜய் சேதுபதி கைவசம் உள்ளது.