எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவாகி வரும் லாபம் திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்து முடிந்தது. விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடித்துள்ளார். ஜகபதி பாபு, சாய் தன்ஷிகா, கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடிக்கின்றனர். இமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். 

சமூக அக்கறை மிகுந்த கதையை பேசும் ஜனநாதனின் திரைமொழிக்கு தனி ரசிகர்கள் உண்டு. புறம்போக்கு படத்தில் விஜய் சேதுபதியை இயக்கிய ஜனநாதன், இரண்டாவது முறையாக லாபம் படத்தில் இயக்கியுள்ளார். இந்த படத்தின் ட்ரைலர் ஏற்கனவே வெளியானது. லாபம் படத்தின் படப்பிடிப்பின் தளத்தில் தினசரி மக்கள் கூட்டம் அலைமோதுகிறது என ஒரு பேச்சு போய்க்கொண்டே இருக்கிறது. கொரோனாவை பொருட்படுத்தாமல் மக்கள் விஜய் சேதுபதியை காண கும்பலாக திரண்டு வருவதை காண முடிந்தது. 

லாபம் இறுதி கட்ட படப்பிடிப்பில் விஜய் சேதுபதியுடன் டேனியல் ஆனி பாப், கலையரசன் ஆகியோர் இணைந்து நடித்தனர். இந்நிலையில் விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகளை நிறைவு செய்துள்ளது படக்குழு. சமீபத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து வெளியான விஜய் சேதுபதியின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. 

இந்நிலையில் லாபம் படத்தின் ஸ்ட்ரீமிங் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைபற்றியுள்ளது. தேதிகள் குறித்த விவரம் தெரியவில்லை. முதலில் திரையரங்கில் வெளியாகி அதன் பின் நெட்பிளிக்ஸில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் உருவாகி வரும் துக்ளக் தர்பார் படத்தின் படப்பிடிப்பில் இணைந்தார் விஜய் சேதுபதி. மலையாளத்தில் மார்க்கோணி மத்தாயி என்ற படத்திற்கு பின்னர் விஜய்சேதுபதி இரண்டாவதாக நடிக்கும் மலையாளப் படம் 19 (1) (a). இப்படப்பிடிப்பு கேரள மாநிலம் தொடுபுழாவில் துவங்கி நடைபெற்று முடிந்தது. நடிகை நித்யா மேனன் மற்றும் இந்திரஜித் சுகுமாரன் முக்கிய ரோலில் நடிக்கிறார்கள். 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி ரிலீஸுக்கு தயாராக இருக்கும் மாஸ்டர் படத்தில் தளபதி விஜய்யுடன் இணைந்து நடித்துள்ள விஜய் சேதுபதியின் நடிப்பை காண ஆவலாக உள்ளனர் ரசிகர்கள். இது தவிர்த்து மணிகண்டன் இயக்கிய கடைசி விவசாயி, சீனு ராமசாமியின் மாமனிதன், வெங்கட கிருஷ்ணா ரோகந்தின் யாதும் ஊரே யாவரும் கேளிர் போன்ற படங்கள் விஜய் சேதுபதி கைவசம் உள்ளது. 

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பும் துவங்கவுள்ளது என்ற செய்திகள் திரை வட்டாரத்தில் பேசப்படுகிறது. இருந்தாலும் அதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் மட்டுமே உறுதியாக கூற இயலும்.