விஜய்சேதுபதி நடிப்பில் உருவான திரைப்படம் கா.பெ. ரணசிங்கம். ஐஸ்வர்யா ராஜேஷ் ஹீரோயினாக முக்கிய ரோலில் நடித்துள்ளார். விருமாண்டி இயக்கிய இந்த படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வந்தது படக்குழு. கொரோனா அச்சுறுத்தலால் அந்தப் பணிகள் பாதிக்கப்பட்டன. இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். 

சமுத்திரக்கனி, ராம், வேல.ராமமூர்த்தி, ரங்கராஜ் பாண்டே, பவானி ஸ்ரீ உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை பார்த்துவிட்டு இசையமைப்பாளர் ஜிப்ரான் பாராட்டி பதிவு செய்திருந்தார். பின்னணி இசைக்கான பணிகளை முடித்தார். அறம் படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவின் மிக முக்கியமான படம் இது. இதில் ஒரு அங்கமாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன் என்றும் புகழாரம் சூட்டினார். 

கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், லாக்டவுனில் பல திரைப்படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாவதை பார்க்க முடிகிறது. அதே சமயம், பெரிய பட்ஜெட் படங்களும் இதில் வெளியாகவுள்ளதென வதந்திகள் வருவதையும் பார்க்க முடிகிறது. சமீபத்தில் சூரரைப் போற்று திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து இதுபோன்று பல படங்கள் வெளியாகும் என்று ரசிகர்கள் எண்ணி வருகின்றனர். 

இதனால் க.பெ. ரணசிங்கம் திரைப்படம் ஓடிடி-ல் வெளியாகிறது என தவறான போஸ்டர் ஒன்று இணையத்தில் காட்டுத்தீ போல் பரவியது. இச்செய்தி முற்றிலும் தவறு என தயாரிப்பு நிறுவனமான கே.ஜெ.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் பதிவு ஒன்றை செய்துள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை திரை ரசிகர்கள் காத்திருக்கவேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தனர். 

படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் முழுவதும் முடிந்து படம் தயாராக உள்ளது என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். படத்தில் பணியாற்றிய சண்முகம் முத்துச்சாமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதன் புகைப்படத்தை சில நாட்கள் முன்பு பதிவு செய்திருந்தார். இதனால் படத்தின் ரிலீஸ் தேதியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் திரை விரும்பிகள். 

இந்நிலையில் படத்தின் முதல் சிங்கிள் நாளை மாலை 7 மணியளவில் வெளியாகவுள்ளது. ஜிப்ரான் இசையமைக்க வைரமுத்து பாடல் வரிகளை எழுதியுள்ளார். ஜிப்ரான் மற்றும் வைரமுத்து காம்போவில் உருவாகிய இந்த பாடல் ஆல்பத்தை கேட்டு ரசிக்க காத்திருக்கின்றனர் ரசிகர்கள். 

மக்கள் விரும்பும் மக்கள் செல்வனாக திகழ்பவர் விஜய் சேதுபதி. கமர்சியல் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்தாலும், வில்லன் ரோல், வித்தியாசமான கதை, வித்தியாசமான கதாபாத்திரம் என தேர்ந்தெடுத்து நடிப்பதிலும் குறை வைக்காமல் அசத்தி வருகிறார் விஜய் சேதுபதி. இந்த லாக்டவுனில் இயக்குனர் நலன் குமாரசாமியுடன் இணைந்து புது ஜானரில் ஒரு ஹேங்கவுட் படத்தில் நடிக்கவுள்ளார். அதைத்தொடர்ந்து டாப்ஸி நடிக்கும் படத்தில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.