இளைஞர்கள் விரும்பும் ஜாலியான படைப்புகளின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். இயக்குனர் அல்லாது பாடலாசிரியர், நடிகர் என பன்முக திறமையுள்ளவர். இவரது இயக்கத்தில் வெளிவந்த போடா போடி, நானும் ரௌடி தான், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. நயன்தாரா நடித்த நெற்றிக்கண் படத்தை தயாரித்ததன் மூலம் தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்தார் விக்னேஷ் சிவன். தனது ரவுடி பிக்சர்ஸ் மூலம் அருண் மாதேஸ்வரன் இயக்கிய ராக்கி படத்தையும் வழங்கவுள்ளார். இதன் அறிவிப்பு நேற்று வெளியானது. 

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடிக்கும் திரைப்படம் காத்து வாக்குல ரெண்டு காதல். இதன் அறிவிப்பு காதலர் தினத்தன்று வெளியானது. கொரோனா வைரஸ் பிரச்சனை ஏற்படவே திட்டமிட்டபடி படப்பிடிப்பை துவங்க முடியாமல் போனது. இந்நிலையில் காத்து வாக்குல ரெண்டு காதல் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியுள்ளது. 

பூஜையில் விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி சிரித்த முகமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. ராக்ஸ்டார் அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கவிருக்கிறார். செவன் ஸ்க்ரீன் நிறுவனம் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது. ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர் மற்றும் பிற தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

காத்து வாக்குல ரெண்டு காதல் படப்பிடிப்பு துவக்கம் குறித்த அறிவிப்பில் சமந்தாவின் பெயரும் இருக்கிறது. அந்த படத்தில் நடிக்க முடியாது என்று நடிகை சமந்தா கூறியதாக முன்பு செய்திகள் இணையத்தில் கசிந்தது. இந்நிலையில் சமந்தாவின் பெயரை அறிவிப்பில் பார்த்ததில் மகிழ்ச்சியாக உள்ளனர். மேலும் சூப்பர் டீலக்ஸ் படத்திற்கு பிறகு சமந்தா தமிழில் நடிப்பதால் அதிக ஆவலில் உள்ளனர் ரசிகர்கள். 

முன்னதாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதியும், நயன்தாராவும் சேர்ந்து நடித்த நானும் ரௌடி தான் படம் ஹிட்டானது. அதனால் இந்த வெற்றிக் கூட்டணியில் உருவாகும் காத்து வாக்குல ரெண்டு காதல் படமும் அதிக எதிர்பார்ப்பில் உள்ளது. 

ஒரு புறம் மாஸ்டர் ரிலீஸுக்காக காத்திருக்கிறார்கள் விஜய் சேதுபதி ரசிகர்கள். இதற்கிடையே எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் லாபம் படத்தில் நடித்து முடித்தார் விஜய் சேதுபதி. இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்பிலிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. திரையரங்கில் லாபம் திரைப்படம் வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கப்படுமாம்.