இந்திய சினிமாவின் இன்றியமையாத நடிகர்களில் ஒருவராக உயர்ந்து நிற்கும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் நடிப்பில் வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் மே 20ஆம் தேதி மாமனிதன் ஆகிய திரைப்படங்கள் நேரடியாக திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளன. தொடர்ந்து விஜய் சேதுபதியின் நடிப்பில் அடுத்தடுத்து திரைப்படங்கள் வெளிவர தயாராகி வருகின்றன.

இதனிடையே மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஒரு லட்சம் குடும்பத்தினருக்கு வேலை வாய்ப்பு செய்து கொடுத்துள்ளார் என்ற செய்தி மக்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியதோடு பலரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறது. புதுச்சேரியை சேர்ந்த சமூக ஆர்வலர் திரு.இ.பா.வீரராகவன் அவர்கள் இதனை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

தனிநபராக சமூக ஆர்வலர் வீரராகவன் கடந்த 2016-ம் ஆண்டிலிருந்து 2019-ம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 3345 நபர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்று கொடுத்துள்ளார். சன் டிவியில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய “நம்ம ஊரு ஹீரோ” நிகழ்ச்சியில் வீரராகவனின் இந்த சாதனை சேவை கௌரவிக்கப்பட்டது. நிகழ்ச்சி நிறைவடைந்ததற்குப் பிறகு வீரராகவன் உடன் மிகுந்த அக்கறையோடு பேசிய விஜய் சேதுபதி இந்த சேவையை தொடர்ந்து செய்யுமாறு கேட்டுக் கொண்டதோடு அதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்துள்ளார்.

இதனையடுத்து உடனடியாக தன்னுடைய வேலையை ராஜினாமா செய்த வீரராகவன் முழுமூச்சாக இந்த சேவையில் இறங்கியதோடு இதற்காக வள்ளலார் வேலைவாய்ப்பு சேவை இயக்கம் என்ற இயக்கத்தை தொடங்கினார். புதுச்சேரியில் உள்ள தவளகுப்பத்தில் இதற்கான அலுவலகத்தை அமைத்து இயக்கத்தை விரிவு செய்வதற்கான அறங்காவலர் மற்றும் ஊழியர்களை தேர்வு செய்து, ஒருங்கிணைத்து அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு தொண்டு நிறுவனமாக மாற்ற உதவியதோடு வீரராகவன் மற்றும் அவரைச் சார்ந்த அனைத்து ஊழியர்களுக்கும் சரியான நேரத்தில் தொடர்ந்து சம்பளம் கொடுத்து உதவியுள்ளார் விஜய் சேதுபதி.

தொடர்ந்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறு, குறு, பெரு மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் தங்களது நிறுவனத்திற்கு தேவையான மனிதவள தேவை விபரங்களை அளித்து அதனை வாட்ஸ்அப் மற்றும் யூ டியூப் மூலமாக வேலை தேடும் நபர்கள் அனைவரிடமும் கொண்டு சேர்த்தனர். முழுக்க முழுக்க எந்த கட்டணமும் இன்றி இந்த சேவையால் இரு தரப்பினரும் பயனடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மார்ச் 20-2022 வரையில் பல்வேறு நிறுவனங்களில் இருந்து தினந்தோறும் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில்  1,00,133 படித்த தகுதியான நபர்கள் இதன்மூலம் வேலை பெற்று பயனடைந்துள்ளனர். மேலும் தற்போதைய தகவல்களின் அடிப்படையில் வள்ளலார் வேலைவாய்ப்பு சேவை இயக்கத்தை 4,35,000-க்கும் மேற்பட்ட நபர்கள் 1400 க்கும் மேற்பட்ட வாட்ஸ் அப் குழுக்கள் மற்றும் யூடியூப் சேனல்கள் வாயிலாக பின்பற்றி வருகின்றனர்.

இது மட்டுமல்லாமல் அரசு வேலை தேடுபவர்களுக்கு வழிகாட்டுதலை வழங்குவது, அரசின் சுய தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்க நிறுவனத்துடன் இணைந்து சுயதொழில் முனைவோரை உருவாக்குவது ஆகியவற்றிலும் ஈடுபட்டுவரும் வள்ளலார் வேலைவாய்ப்பு சேவை இயக்கமானது கல்லூரிகளில் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டுதல் முகாம்களையும் நடத்தி உள்ளது. 

17 வேலைவாய்ப்பு முகாம்களை தனியாகவும் 3 முகாம்களை அரசுடன் இணைந்தும் நடத்தியுள்ள வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கம் மூலம் தேவையான வேலைவாய்ப்பு தகவல்களை பெற http://www.vvvsi.com  இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இது போன்ற தேவையான நல்ல தகவல்களை பலருக்கும் பகிர்ந்து உதவுங்கள்.

திரைப்படத்தில் மட்டுமல்லாது நிஜத்திலும் மாமனிதனாக திகழும் விஜய்சேதுபதி இத்தனை நற்பணிகளை செய்த பிறகும் இந்த தகவல்களை வெளியே சொல்ல வீரராகவனை தொடர்ந்து தடுத்து வந்துள்ளார் விஜய் சேதுபதி. இருப்பினும் இந்த முறை அவர் கோபித்துக் கொண்டாலும் பரவாயில்லை என வீரராகவன் இவை அனைத்தையும் மக்களுடன் பகிர்ந்துள்ளார். தான் வெறும் நடிகன் அல்ல என்றும் மக்கள் தன் மீது காட்டும் அன்பின் மீது பெரும் மதிப்பும் அளவற்ற அன்பும் அக்கறையும் உடைய நல்ல மனிதன்  என்பதை நிரூபித்துள்ளார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.