தமிழ் திரையுலகில் விஜய், சூர்யா, தனுஷ் துவங்கி சீயான் விக்ரமின் மகன் துருவ் வரை வாரிசு நடிகர்கள் ஏராளம். சமீபத்தில் கூட நடிகர் அருண் விஜய்யின் மகன் ஆர்னவ், சூர்யா தயாரிக்கும் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருக்கிறார் என்ற அறிவிப்பு வெளியாகியிருந்தது. இப்படி ஒரு நிலையில் தமிழ் சினிமாவில் மக்கள் செல்வன் என்ற அந்தஸ்துடன் இருந்து வரும் விஜய் சேதுபதியின் மகளும் தற்போது சினிமாவில் கால் பதிக்க உள்ளார். 

விஜய் சேதுபதியின் மகன் சூரியா, நானும் ரவுடிதான் படத்தில் சின்ன வயது விஜய் சேதுபதியாக நடித்து அறிமுகமானார். அதன் பின் SU அருண் குமார் இயக்கிய சிந்துபாத் படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் விஜய் சேதுபதியின் நண்பராக நடித்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் சூரியா. இந்நிலையில் விஜய் சேதுபதியின் மகள் ஸ்ரீஜா விஜய் சேதுபதி சினிமாவில் அறிமுகமாக உள்ளார். 

விஜய் சேதுபதி ப்ரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவான முகிழ் என்ற வெப் படத்தில் நடித்துள்ளார். ஒரு மணி நேரம் கொண்ட இந்த வெப் தொடரில் ரெஜினா கசண்ட்ரா மற்றும் விஜய் சேதுபதி முக்கிய ரோலில் நடித்துள்ளனர். கார்த்திக் இயக்கியுள்ள இப்படத்தின் டிரெய்லரை நாளை புத்தாண்டன்று மாலை 5 மணிக்கு வெளிவரவுள்ளது. ஸ்ரீஜாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் திரை ரசிகர்கள். 

விஜய் சேதுபதி நடிப்பில் உருவான லாபம் திரைப்படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. எஸ்.பி.ஜனநாதன் இயக்கிய இப்படப்பிடிப்பு கடந்த மாதம் நடந்து முடிந்தது. லாபம் படத்தின் ஸ்ட்ரீமிங் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைபற்றியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி ரிலீஸுக்கு தயாராக இருக்கும் மாஸ்டர் படத்தில் தளபதி விஜய்யுடன் இணைந்து நடித்துள்ள விஜய் சேதுபதியின் நடிப்பை காண ஆவலாக உள்ளனர் ரசிகர்கள். 

இது தவிர்த்து மணிகண்டன் இயக்கிய கடைசி விவசாயி, சீனு ராமசாமியின் மாமனிதன், வெங்கட கிருஷ்ணா ரோகந்தின் யாதும் ஊரே யாவரும் கேளிர் போன்ற படங்கள் விஜய் சேதுபதி கைவசம் உள்ளது. தற்போது விக்னேஷ் சிவன் இயக்கி வரும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. இதில் நயன்தாரா மற்றும் சமந்தா நடிக்கின்றனர். செவன் ஸ்க்ரீன் நிறுவனம் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது.