ஜனங்களின் நாயகனான மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் திரைப்படங்கள் அடுத்தடுத்து ரசிகர்களை மகிழ்விக்க தயாராகி வருகின்றன. முன்னதாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி இணைந்து நடிக்க உருவாகிறது விடுதலை திரைப்படம். இத்திரைப்படத்தில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

தொடர்ந்து உலக நாயகன் கமல்ஹாசனுடன் இணைந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் VJS46 திரைப்படம், மாநகரம் படத்தின் பாலிவுட் ரீமேக்காக தயாராகியுள்ள மும்பைக்கர் மற்றும் நடிகை அதிதி ராவ் ஹைதாரி உடன் இணைந்து காந்தி டாக்ஸ் என்னும் மௌன திரைப்படம் ஆகிய படங்கள் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளிவர உள்ளன.

அடுத்ததாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் அவரது மகளான ஸ்ரீஜா விஜய் சேதுபதி மற்றும் நடிகை ரெஜினா கெஸன்ட்ரா இணைந்து நடித்துள்ள முகிழ் திரைப்படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. விஜய் சேதுபதி புரொடக்ஷ்ன்ஸ் மற்றும் பாக்கெட் மனி பிலிம்ஸ் புரோடக்ஷ்ன் இணைந்து வழங்கும் முகிழ் திரைப்படத்தை இயக்குனர் S.கார்த்திக் இயக்கியுள்ளார்.

சத்யா பொன்மார் ஒளிப்பதிவில், கோவிந்தராஜ் படத்தொகுப்பு செய்துள்ள முகிழ் படத்திற்கு இசையமைப்பாளர் ரெவா இசையமைக்க பாலாஜி தரணிதரன் பாடல்களை எழுதியுள்ளார். இந்நிலையில் வருகிற அக்டோபர் 8-ம் தேதி திரையரங்குகளில் முகிழ் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. விஜய் சேதுபதியும் அவரது மகளான ஸ்ரீஜா விஜய் சேதுபதியும் இணைந்து நடித்துள்ள முகிழ் படத்தின் நீளம் 62 நிமிடங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.