விழிகளுக்கு விருந்து வைக்கும் ஒளிப்பதிவாளர்களில் ஒருவர் விஜய் கார்த்திக் கண்ணன். ஒளிப்பதிவில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கி, புதுமையான கேமரா கோணங்களில் காட்சிகளை படமாக்கி திரை விரும்பிகளை ஈர்த்து வருகிறார். விஜய் சேதுபதி நடித்த சிந்துபாத் படத்தில் இவரது ஒளிப்பதிவு பெரிதளவில் பேசப்பட்டது. அதன் பின் அமலா பால் நடித்த ஆடை படத்தின் காட்சிகளை ஒளிப்பதிவு செய்ததன் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். சில்லுக்கருப்பட்டி வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்தார். 

இந்நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படக்குழுவில் இணைந்துள்ளார் விஜய் கார்த்திக் கண்ணன். இந்த அறிவிப்பை விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தள பக்கங்களில் தெரிவித்தார். 

கடந்த அக்டோபர் மாதம் மேற்கு தொடர்ச்சி மலைக்கு ரெக்கி பார்க்க சென்றிருந்தார் விக்னேஷ் சிவன். படத்திற்காக லொகேஷன் பார்க்க ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணனோடு தான் சென்றிருந்தார். மேற்கு தொடர்ச்சி மலையில் கடையம் என்ற ஊருக்கு இவர்கள் சென்ற போது எந்த படத்துக்காக இருக்கும் என்ற கேள்விகள் எழுந்தது. இந்நிலையில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திற்காக தான் என்பது அறிவிப்பின் மூலம் உறுதியாகியுள்ளது. 

விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடிக்கின்றனர். படம் தொடர்பான முதல் கட்ட அறிவிப்பு காதலர் தினத்தன்று வெளியானது. கொரோனா வைரஸ் பிரச்சனை ஏற்படவே திட்டமிட்டபடி படப்பிடிப்பை துவங்க முடியாமல் போனது. இதனையடுத்து காத்து வாக்குல ரெண்டு காதல் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் துவங்கியது. 

ராக்ஸ்டார் அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கவிருக்கிறார். செவன் ஸ்க்ரீன் நிறுவனம் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது. விரைவில் மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.