தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர், பாடகர், நடிகர், தயாரிப்பாளர், படத்தொகுப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட விஜய் ஆண்டனி அடுத்ததாக பிச்சைக்காரன் 2 படத்தை இயக்கி இயக்குனரனாகவும் களமிறங்குகிறார். தற்போது இயக்குனர் ஏ.செந்தில்குமார் இயக்கத்தில் தயாராகி வரும் காக்கி திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்து வரும் விஜய் ஆண்டனியின் அடுத்த படத்தின் டைட்டில் இன்று வெளியானது.

நடிகை பூஜா நடிப்பில் வெளிவந்து விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்ற விடியும் முன் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் பாலாஜி குமார் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்க, நடிகை ரித்திகா சிங் கதாநாயகியாக நடிக்கிறார்.

மேலும் ராதிகா சரத்குமார், அர்ஜுன் சிதம்பரம், முரளி சர்மா, மீனாட்சி சவுத்ரி, சித்தார்த்தா சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் மற்றும் லோட்டஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு, சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்ய கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்கிறார். செல்வா.ஆர்.கே படத்தொகுப்பு செய்கிறார்.

விஜய் ஆண்டனியின் இந்த படத்திற்கு “கொலை” என பெயரிடப்பட்டுள்ளது எமன், சைத்தான், பிச்சைக்காரன், கொலைகாரன், திமிருபிடிச்சவன் வித்தியாசமான டைட்டில்களின் வரிசையில் கொலை திரைப்படமும் இடம்பெற்றுள்ளது. தொடர்ந்து கொலை படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.