இசையமைப்பாளராக அறிமுகமாகி, இன்று மக்கள் விரும்பும் எதார்த்த நாயகனாக திகழ்பவர் நடிகர் விஜய் ஆண்டனி. தொடர்ந்து வித்தியாசமான படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். விஜய் ஆண்டனியின் சிறப்பு என்னவென்றால், அவரது படத்தில் தேவையில்லாத பன்ச் வசனம், பில்ட் அப், மாஸ் காட்சிகள் போன்ற காட்சிகள் இருக்காது. இந்த லாக்டவுனில் தயாரிப்பாளர்களின் நலன் கருதி தனது சம்பளத்தை குறைத்த முதல் நடிகர் என்ற பெருமையையும் விஜய் ஆண்டனி பெற்றுள்ளார். 

விஜய் ஆண்டனியின் பிறந்தநாளில் பிச்சைக்காரன் 2 படத்தின் அறிவிப்பு வெளியாகி அசத்தியது. கடந்த 2016ம் ஆண்டு வெளியாகி ஹிட்டான பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கிறார்கள். பிச்சைக்காரன் 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது. தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகவிருக்கும் பிச்சைக்காரன் 2 படத்தை தேசிய விருது பெற்ற ப்ரியா கிருஷ்ணசாமி இயக்குகிறார். 

பிச்சைக்காரன் படத்தை சசி இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆந்திராவில் இந்த திரைப்படம் பல சாதனைகளை செய்ததால் தெலுங்குப் படத்தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களாலும் பெரிதும் விரும்பப்படுபவராகிவிட்டார் விஜய் ஆன்டனி. 

FEFSI சிவா அவர்களின் தயாரிப்பில் தமிழரசன் என்ற படத்தை நடித்து முடித்தார். தற்போது அம்மா கிரீயேஷன்ஸ் T. சிவா அவர்களின் தயாரிப்பில் அக்னி சிறகுகள் என்ற படத்திலும், இயக்குனர் செந்தில் குமாரின் ஓபன் தியேட்டர் மற்றும் இன்பினிட்டி பிலிம் வென்சர்ஸ் நிறுவனம் சார்பில் எடுக்கப்படும் காக்கி என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த படங்களை தொடர்ந்து விஜய் மில்டன் மற்றும் பாலாஜி கே.குமார் ஆகியோரின் பெயரிடப்படாத படங்களிலும் நடிக்கவுள்ளார் விஜய் ஆண்டனி.

இந்நிலையில் விஜய் ஆன்டனி கதாநாயகனாக நடிக்கும் 14 வது படத்தை செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் - T . D ராஜா தயாரிக்கிறார். இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இப்படத்தை இயக்குகிறார். ஆத்மீகா நாயகியாக நடிக்கிறார். இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் வழங்க  Dr. தனஞ்செயன் இப்படத்தை வெளியிடுகிறார்.  நிவாஸ் கே. பிரசன்னா இசையமைக்கிறார். நேற்று இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்ட விஜய் ஆன்டனி, ஆனந்த கிருஷ்ணன் மற்றும் படக்குழுவினர் படப்பிடிப்பு தளத்தில் எஸ் பி பி-ன் உருவப்படத்திற்கு மலர் தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். 

கொரோனா வைரஸ் பிரச்சனையால் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கடந்த மாதம் 5ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தான் விரைவில் வீடு திரும்பிவிடுவேன் என அவரே மருத்துவமனையில் இருந்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். ஆனால் அதன் பிறகு அவரின் நிலைமை மோசமானது. சிகிச்சை பலனின்றி நேற்றைய முன்தினம் எஸ்பி பாலசுப்பிரமணியம் இந்த உலகை விட்டு பிரிந்தார். அவரின் மறைவால் திரையுலகை சேர்ந்தவர்களும், ரசிகர்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். நேற்று தாமரைப்பாக்கத்தில் அவருக்கு இறுதி மரியாதை செய்யப்பட்டது. மறைந்த பாடகர் எஸ்.பி.பி தனது பாடல்கள் மூலம் நம்முடன் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்.