தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகி பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து ரசிகர்களின் ஃபேவரட் இசையமைப்பாளராக மனதில் இடம் பிடித்த விஜய் ஆண்டனி அவர்கள் தற்போது நடிகராக, தயாரிப்பாளராக, படத்தொகுப்பாளராக என பன்முகத்தன்மை கொண்ட கலைஞராக வலம் வருகிறார். தொடர்ந்து பிச்சைக்காரன் 2 படத்தை இயக்குவதன் மூலம் இயக்குனர் அவதாரமும் எடுக்கிறார்.

முன்னதாக இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடித்து கடந்த மாதம் வெளிவந்த கோடியில் ஒருவன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று சூப்பர் ஹிட் ஆனது. அடுத்ததாக இயக்குனர் A.செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகும் காக்கி திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்து வருகிறார்.

இதனை அடுத்து விஜய் ஆண்டனி நடிக்கும் புதிய திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று வெளியானது. விடியும் முன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் பாலாஜி குமார். நடிகை பூஜா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த விடியும் முன் த்ரில்லர் திரைப்படமாக வெளிவந்து விமர்சனரீதியாகவும் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தற்போது இயக்குனர் பாலாஜி குமார் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கவுள்ளார். இப்படத்தை இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் மற்றும் லோட்டஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கிறது. இந்த புதிய திரைப்படத்தின் டைட்டில் வருகிற அக்டோபர் 15ஆம் தேதி மாலை 5.05 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.