தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் விஜய் ஆண்டனி தொடர்ந்து நடிகராகவும் அடுத்தடுத்து அட்டகாசமான படங்களில் நடித்து ரசிகர்களின் இதயங்களில் தனக்கென தனி இடம் பிடித்துள்ளார். இதனையடுத்து பிச்சைக்காரன் 2 திரைப்படத்தை இயக்கி நடிப்பதன் மூலம் இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ளார் விஜய் ஆண்டனி.

முன்னதாக அக்னிச்சிறகுகள், காக்கி, தமிழரசன் உள்ளிட்ட விஜய் ஆண்டனியின் திரைப்படங்கள் ரிலீஸுக்காக காத்திருக்கும் நிலையில், ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான விஜய் மில்டன் இயக்கத்தில் மழை பிடிக்காத மனிதன் மற்றும் தமிழ் படம் பட இயக்குனர் C.S.அமுதன் இயக்கத்தில் ரத்தம் ஆகிய படங்களும் விஜய் ஆண்டனி நடிப்பில் தயாராகி வருகின்றன.

இதனிடையே இயக்குனர் பாலாஜி.K.குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள திரைப்படம் கொலை. க்ரைம்-சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் மற்றும் லோட்டஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள கொலை திரைப்படத்தில் ரித்திகா சிங், ராதிகா சரத்குமார், மீனாக்ஷி சௌத்ரி, முரளி சர்மா, அர்ஜுன் சிதம்பரம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவில், கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். இந்நிலையில் கொலை திரைப்படத்தில் இருந்து பார்த்த ஞாபகம் இல்லையோ வீடியோ பாடல் தற்போது வெளியானது. மெல்லிசை மன்னர்கள் M.S.விஸ்வநாதன் மற்றும் ராமமூர்த்தி அவர்களின் எவர்கிரீன் ஹிட் பாடலான பார்த்த ஞாபகம் இல்லையோ பாடல் அப்படியே புதிய பரிமாணத்தில் கொலை படத்தில் இடம்பெற்றுள்ளது . அந்த வீடியோ பாடல் இதோ…