இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி நடிப்பில் கடைசியாக கடந்த ஆண்டு ரிலீஸான கோடியில் ஒருவன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று சூப்பர் ஹிட்டானது. தொடர்ந்து விஜய் ஆன்டனியின் நடிப்பில்  தமிழரசன், காக்கி மற்றும் அக்னி சிறகுகள் ஆகிய திரைப்படங்களும் நிறைவடைந்து விரைவில் ரிலீஸாக தயாராகி வருகின்றன. 

முன்னதாக இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள மழை பிடிக்காத மனிதன் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்து இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதனையடுத்து தமிழ் படம் படத்தின் இயக்குனர் C.S.அமுதன் இயக்கத்தில் பொலிட்டிக்கல் த்ரில்லர் படமாக தயாராகி வரும் ரத்தம் படத்தில் தற்போது நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி. 

இந்த வரிசையில் இயக்குனர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து வெளிவந்து சூப்பர் ஹிட்டான பிச்சைக்காரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது பிச்சைக்காரன் 2 திரைப்படம் தயாராகி வருகிறது. விஜய் ஆண்டனி முதல் முறை இயக்குனராக அவதாரம் எடுத்துள்ள பிச்சைக்காரன் 2 படத்தை விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் தயாரித்துள்ளது. 

ஓம் நாராயண் ஒளிப்பதிவில், லியோ ஜான்பால் படத்தொகுப்பு செய்யும் பிச்சைக்காரன் 2 படத்திற்கு விஜய் ஆண்டனியே இசையமைத்துள்ளார்.  இந்நிலையில் பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து ஷூட்டிங் புகைப்படங்களை விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது…விரைவில் சந்திப்போம்" என குறிப்பிட்டுள்ளார். எனவே பிச்சைக்காரன் 2 படத்தின் இதர அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.