தமிழ் சினிமா ரசிகர்களின் ஃபேவரைட் இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் தற்போது நடிகர்,தயாரிப்பாளர்,படத்தொகுப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட கலைஞராக வலம் வருகிறார். அடுத்தடுத்து பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வரும் விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 2 படத்தின் மூலம் இயக்குனராகவும் களமிறங்குகிறார்.

முன்னதாக இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் மழை பிடிக்காத மனிதன் மற்றும் இயக்குனர் பாலாஜி குமார் இயக்கத்தில் கிரைம் த்ரில்லர் திரைப்படமாக தயாராகியிருக்கும் கொலை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் இயக்குனர் பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் தமிழரசன், இயக்குனர் A.செந்தில்குமார் இயக்கத்தில் காக்கி மற்றும் மூடர் கூடம் பட  இயக்குனர் நவீன் இயக்கத்தில் அக்னி சிறகுகள் என வரிசையாக திரைப்படங்கள் விஜய் ஆண்டனி நடிப்பில் விரைவில் வெளிவர தயாராகி வருகின்றன.

இதனிடையே  தமிழ் படம் படத்தின் இயக்குனர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் புதிய படத்திலும் நடித்து வருகிறார் . விஜய் ஆன்டணியின் கோடியில் ஒருவன் மற்றும் கொலை ஆகிய படங்களைத் தொடர்ந்து 3-ஆக விஜய் ஆண்டனி நடிக்கும் இந்தத் திரைப்படத்தையும் இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர் தயாரிப்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது.

இந்நிலையில் இத்திரைப்படத்தின் டைட்டில் நாளை (ஜனவரி 23ஆம் தேதி) வெளியாகவுள்ளது. நாளை மாலை 4:15 மணிக்கு விஜய் ஆண்டனி மற்றும் இயக்குனர் அமுதன் இணையும் ட்விட்டர் ஸ்பேஸில் வெளியிடப்பட உள்ளதாக "தெறிக்க... தெறிக்க..." என குறிப்பிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.