தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனரான ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த வெண்ணிற ஆடை படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் ஸ்ரீகாந்த். இதே வெண்ணிற ஆடை படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான மறைந்த முதலமைச்சர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கு ஜோடியாக நடித்த முதல் கதாநாயகன் ஸ்ரீகாந்த் தான்.

தமிழ் சினிமாவின் மிகப்பெரிய ஆளுமைகளான சிவாஜி கணேசன் ஜெய்சங்கர் முத்துராமன் ரஜினிகாந்த் கமல்ஹாசன்  ஆகியோருடன் இணைந்து நடித்த நடிகர் ஸ்ரீகாந்த், இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த நானல், பாமா விஜயம், எதிர்நீச்சல் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

குறிப்பாக வியட்நாம் வீடு, தங்கப்பதக்கம் படங்களில் சிவாஜி கணேசனுக்கு மகனாகவும், ராஜபார்ட் ரங்கதுரை படத்தில் சகோதரனாகவும்,சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்த பைரவி படத்தில் வில்லனாகவும் மற்றும் நடிகர் முத்துராமன் நடித்த காசேதான் கடவுளடா உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில்  நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் ஸ்ரீகாந்த்.

இந்நிலையில் நடிகரான ஸ்ரீகாந்த் இன்று உயிரிழந்தார். 82 வயதான நடிகர் ஸ்ரீகாந்த் இன்று மதியம் காலமானார். பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்தின் மறைவுக்கு தமிழ் திரையுலகை சேர்ந்த பல முன்னணி பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.