தெலுங்கு சினிமாவின் பழம்பெரும் நடிகரான கிருஷ்ணம் ராஜு காலமானார். தெலுங்கு திரையுலகில் ரெபெல் ஸ்டார் என அழைக்கப்படும் கிருஷ்ணம் ராஜு, கடந்த 1966-ம் ஆண்டு வெளிவந்த சிலக்கா கொரிங்கா திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி இதுவரை 190-க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

கதாநாயகனாகவும் அசத்தலான வில்லன் நடிகராகவும் நல்ல குணசித்திர நடிகராகவும் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் கிருஷ்ணம் ராஜு நடித்துள்ளார் குறிப்பாக ஜீவனா தரங்களு, கிருஷ்ணவேணி, பக்த கண்ணப்பா, அமரதீபம், சதி சாவித்திரி, சீதாராமலு, திரிசூலம், தந்திர பப்ராயுடு, விஸ்வநாத நாயக்கடு, ரங்கூன் ரவுடி ஆகிய படங்களில் தனது நடிப்பால் கவனத்தை ஈர்த்தவர்.

நடிகர் பிரபாஸின் தந்தையின் சகோதரரான கிருஷ்ணம் ராஜு கடைசியாக நடிகர் பிரபாஸ் கதாநாயகனாக நடித்து இந்த ஆண்டு வெளிவந்த ராதே ஷ்யாம் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அரசியலிலும் பாரதிய ஜனதா கட்சியில் மத்திய அமைச்சராக இருந்த கிருஷ்ணம் ராஜு பின்னர் சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்யம் கட்சியில் இணைந்தார்.

இந்நிலையில் நடிகர் கிருஷ்ணம் ராஜு தற்போது உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 82. தெலுங்கு சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான மெகா ஸ்டார் சிரஞ்சீவி, பவர் ஸ்டார் பவன் கல்யாண், ஜூனியர் என்டிஆர், மகேஷ்பாபு, வெங்கடேஷ், விஜய் தேவரகொண்டா, உள்ளிட்ட பலரும் கிருஷ்ணம் ராஜுவின் மறைவுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். நடிகர் கிருஷ்ணம் ராஜுவின் மறைவுக்கு கலாட்டா குழுமம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. 
 

Shocked to learn that Krishnam Raju garu is no more... A very sad day for me and the entire industry. His life, his work and his immense contribution to cinema will always be remembered. My deepest condolences to Prabhas and the entire family during this difficult time 🙏

— Mahesh Babu (@urstrulyMahesh) September 11, 2022