இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை மிகவும் தீவிரம் அடைந்து உச்சத்தை தொட்டு இருக்கிறது. தினசரி இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்த நிலையில் தமிழகத்தில் மட்டும் 23 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தினசரி கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனிடையே பல சினிமா பிரபலங்களும்  கொரோனா வைரஸ் தொற்றால்  பாதிக்கப்பட்ட சிலர் உயிரிழந்து வருகிறார்கள். 

முன்னதாக இயக்குனர் கேவி.ஆனந்த் அவர்கள் உயிரிழந்த நிலையில் நேற்று நகைச்சுவை நடிகர் பாண்டு கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். இன்று பழம்பெரும் நடிகர் கல்தூண் திலக்  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 78. 

நடிகர் மேஜர் சுந்தரராஜன் நாடகக்குழுவில் நடிகராக நடித்து வந்த திலக் அவர்கள்,தமிழில் வெளிவந்த வெள்ளிக்கிழமை விரதம், பேர் சொல்ல ஒரு பிள்ளை, ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது போன்ற திரைப்படங்களில் நடித்தார். 

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கே.ஆர்.விஜயா நடிப்பில் மேஜர் சுந்தர்ராஜன் இயக்கிய கல்தூண் திரைப்படத்தில் சிவாஜி கணேசனின் மகனாக திலக் நடித்திருந்தார்.கல்தூண்  திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்த திலக் பின்னாளில் கல்தூண் திலக் என்றே அழைக்கப்பட்டார்.

படத்தொகுப்பாளராக ஏவிஎம் ஸ்டூடியோவில் பணியாற்றிய  கல்தூண் திலக் தொடர்ந்து தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்தார். இந்நிலையில் தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கல்தூண் திலக் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.