தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் கார்த்தி அடுத்ததாக குக்கூ, ஜோக்கர், ஜிப்சி என சிறந்த திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் ராஜூமுருகன் இயக்கத்தில் ஜப்பான் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் ஜப்பான் திரைப்படத்தையும் தயாரிக்கும் ஜப்பான் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த நவம்பர் 8-ம் தேதி பூஜையுடன் தொடங்கப்பட்டது.

கார்த்தியுடன் இணைந்து அனு இமானுவேல் கதாநாயகியாக நடிக்கும் ஜப்பான் திரைப்படத்தில் ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான விஜய் மில்டன் மற்றும் பிரபல தெலுங்கு நடிகர் சுனில் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர். ரவிவர்மன் ஒளிப்பதிவில், GV.பிரகாஷ் குமார் இசையமைக்கும் ஜப்பான் திரைப்படத்திற்கு ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்ய, அன்பறிவு மாஸ்டர்ஸ் ஸ்டண்ட் இயக்குனர்களாக பணியாற்றுகின்றனர். 

இந்த ஆண்டில் வரிசையாக விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் என ஹாட்ரிக் ஹிட் கொடுத்த கார்த்தியின் திரைப்பயணத்தில் 25வது திரைப்படமாக தயாராகும் ஜப்பான் திரைப்படம்  ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதே ஜப்பான் எனும் டைட்டிலில் தான் ஒரு படம் இயக்க திட்டமிட்டுருந்ததாக இயக்குனர் வசந்தபாலன் தற்போது தெரிவித்துள்ளார். இப்படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடிக்க இருந்ததாகவும் குறிப்பிட்டு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் டைட்டில் கார்டுடன் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், “நடிகர் விஷ்ணு விஷாலுடன் 3 ஆண்டுகளுக்கு முன்பு நடக்க வேண்டிய படம். பல்வேறு காரணங்களால் தாமதங்கள் ஏற்பட்டு நடக்கவில்லை. இப்போதும் அவ்வப்பொழுது அந்த படத்தை பண்ணலாம் சார் என்று விஷ்ணு அடிக்கடி தொலைபேசியில் உரையாடுவார். அந்த கதைக்கு வைத்த தலைப்பு. தலைப்புகளில் நமக்கு இருக்கும் அதீத காதல் இருக்கே...அது மிக பெரியது. இதை விட நல்ல தலைப்பை காலம் நம் கைகளில் தரலாம். ஜப்பான் வெல்லட்டும். இயக்குநர் ராஜ் முருகனுக்கும் கார்த்தி அவர்களுக்கும் வாழ்த்துகள்.” என தெரிவித்துள்ளார். இயக்குனர் வசந்தபாலனின் அந்த பதிவு இதோ…