கடந்த 2013-ம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். பொன்ராம் இயக்கத்தில் வெளியான இப்படம் சிவகார்த்திகேயனின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது. இந்த படத்தில் கருப்பன் குசும்புக்காரன் என்ற ஒற்றை வசனத்தின் மூலம் பிரபலமடைந்தவர் குணச்சித்திர நடிகர் தவசி.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில், நடிகர் சூரிக்கு அப்பாவாக இவர் நடித்த கதாபாத்திரம் பலராலும் பாராட்டப்பெற்றது. குறி சொல்லும் வேடம், சாமியாடும் பாத்திரம் இவருக்கு அருமையாக பொருந்தும். இவர் பாரதிராஜாவின், கிழக்குச் சீமையிலே படத்திலிருந்து தனது சினிமா பயணத்தை தொடங்கியவர். சிறு சிறு பாத்திரங்களில் நடித்த இவர் இன்று மக்கள் விரும்பும் கலைஞனாக பல படங்களில் நடித்து வருகிறார். 

கிடா மீசையில் ஸ்டைலாக இருந்த நடிகர் தவசி தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மிகவும் மெலிந்து எலும்பும் தோலுமாகக் காட்சியளிக்கிறார்.  இதுகுறித்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் தவசி குறித்து பேசியவர், புற்றுநோய் பாதிப்பால் அவதிப்படுவதாகவும், மருத்துவ சிகிச்சைக்கு பண உதவி வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்திருக்கிறார். 

நடிகர் தவசியின் மகன் சமூக வலைதளத்தில் பண உதவி கேட்டு வேண்டுகோள் வைத்து வருகிறார். நடிகர் தவசியை கண்ட ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். எப்படி இருந்த மனிதன் இப்படி ஆகிட்டாரே என்று கமெண்ட் செய்து பதிவிட்டு வருகின்றனர். இவரது சிகிச்சைக்கு உதவ வேண்டும் என்ற நோக்கில் இவரது மகனின் தொலைபேசி எண் மற்றும் விலாசத்தை பதிவு செய்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர். 

மக்களை மகிழ்வித்த ஒரு கலைஞனின் வாழ்வில் இவ்வளவு சோகம் நிறைய வேண்டுமா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த 2020 வருடம் மிகவும் மோசமானது என்பதற்கு இதுவும் எடுத்துக்காட்டு என்று கமெண்ட் செய்து வருகின்றனர். குறிப்பாக திரையுலகை சேர்ந்தவர்களுக்கு இந்த வருடம் ராசியே இல்லை என்று கூறி புலம்பி வருகின்றனர்.