ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் என்றால் அது தளபதி 67 தான். விக்ரம் படத்தின் இமாலய வெற்றிக்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்திற்கு பின் தளபதி விஜய் இணையும் தளபதி 67 திரைப்படத்தின் படப்பூஜை கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள ஏவிஎம் ஸ்டுடியோவில் நடைபெற்றது.

மேலும் தளபதி 67 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விஜயின் வாரிசு திரைப்படத்தின் ரிலீஸுக்கு பிறகு வெளியாகும் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார். பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகி இருக்கும் வாரிசு திரைப்படம் அடுத்த ஆண்டு (2023) பொங்கல் வெளியிடாக ஜனவரி 12-ம் தேதி ரிலீஸாகிறது.

அதே பொங்கல் வெளியீடாக அஜித்குமாரின் துணிவு திரைப்படமும் ரிலீஸாக இருப்பதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள். இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு வாரிசு திரைப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு தமிழகத்தை பொறுத்தவரை தளபதி விஜய் தான் நம்பர் ஒன் நடிகர் என தெரிவித்தது திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது.

இந்நிலையில் இது குறித்து விளக்கமளித்துள்ள தயாரிப்பாளர் தில் ராஜு, "தளபதி விஜய் தான் நம்பர் ஒன் என நான் சொன்னதற்கு காரணம் வியாபாரம் மட்டுமே கடைசியாக தளபதி விஜய் நடிப்பில் வந்த ஒவ்வொரு திரைப்படங்களும் மிக எளிதில் 100 கோடி ரூபாயை வசூலித்து விடுகின்றன. தமிழகத்தின் மற்ற பெறும் ஸ்டார்களாக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அஜித் குமாரின் திரைப்படங்களை விடவும் தமிழகத்தில் தளபதி விஜயின் படங்கள் வசூலில் முன்னிலையில் இருப்பதன் காரணமாக வியாபாரத்தின் அடிப்படையிலேயே தளபதி விஜய் தமிழகத்தில் நம்பர் ஒன் என தெரிவித்தேன்" என சமீபத்தில் பேட்டி ஒன்றில் தயாரிப்பாளர் தில் ராஜு தெரிவித்துள்ளார்.