தென்னிந்திய சினிமாவின் குறிப்பிடப்படும் இயக்குனர்களில் ஒருவராக வளர்ந்திருக்கும் இயக்குனர் வம்சி பைடிபல்லி முதல் முறையாக தளபதி விஜய் உடன் இணைந்த திரைப்படம் வாரிசு. பக்கா மாஸ் ஃபேமிலி என்டர்டெய்னர் திரைப்படமாக தயாராகி இருக்கும் வாரிசு திரைப்படம் நாளை ஜனவரி 11ம் தேதி உலகம் எங்கும் பொங்கல் வெளியிடாக ரிலீஸ் ஆகிறது.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன் சார்பில் தில் ராஜு அவர்கள் தயாரிப்பில் உருவாகி இருக்கும் வாரிசு திரைப்படத்தில் தளபதி விஜய் உடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க, சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஸ்ரீகாந்த், குஷ்பூ, ஜெயசுதா, சங்கீதா கிரிஷ், யோகி பாபு, ஷாம், சம்யுக்தா, கணேஷ் வெங்கட்ராமன், ஸ்ரீமான், VTV கணேஷ், ஜான் விஜய், சதீஷ், சுமன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தமன் இசையில் வெளிவந்த அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இதனிடையே நமது கலாட்டா பிளஸ் சேனலுக்கு பேட்டி அளித்த இயக்குனர் வம்சி பைடிபல்லி தனது திரைப்பயண அனுபவங்கள் குறித்தும் வாரிசு திரைப்படம் குறித்தும் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

அந்த வகையில் அவரிடம் உங்களை பொறுத்தவரையில் தமிழ் படமோ தெலுங்கு படமோ எந்த திரைப்படம் பர்ஃபெக்ட் கமர்சியல் படம்..? எனக் கேட்டபோது, “என்னைப் பொறுத்தவரை படையப்பா தான்! அதில் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. குடும்ப உணர்வுகள், உறவுகள், தனது மகளை பாதுகாப்பது... அவர் ஒரு சூப்பர் ஸ்டாராக எந்த உணர்வுகளையும் குறையாமல் பார்த்துக் கொள்கிறார். இது மாதிரியான படங்கள் பார்த்துதான் நாம் வளர்கிறோம் அல்லவா..? அவருக்கு ஒரு மகள் இருக்கிறாள். அந்த மகளை தீய எண்ணம் கொண்டவர்களிடம் இருந்து பாதுகாக்க வேண்டும். அதற்காக அந்த கதாபாத்திரம் கீழே வீழ்வது போல் இருக்கும். என்னைப் பொறுத்தவரை நீங்கள் உங்கள் குடும்பத்திற்காக வீழ்ந்தீர்கள் என்றால்? அது வீழ்ச்சி அல்ல எழுச்சி! அதனால் தான் எனக்கு படையப்பா படம் மாதிரியான படங்கள் மிகவும் பிடிக்கிறது.” என இயக்குனர் வம்சி பைடிபல்லி தெரிவித்துள்ளார். அந்த முழு பேட்டி இதோ…