தமிழ் திரையுலகின் மக்கள் செல்வியாக திகழ்பவர் வரலக்ஷ்மி சரத்குமார். தரமான ஸ்கிரிப்ட்டுகளை தேர்ந்தெடுத்து அதில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். தற்போது இருக்கும் சினிமா ட்ரெண்டில், போல்டான கதாபாத்திரங்களை நடிக்கிறார் வரலக்ஷ்மி. தளபதி விஜய்யுடன் சர்க்கார் படத்திலும், தனுஷுடன் மாரி 2 படத்திலும் துணிச்சலான ரோலில் நடித்திருந்தார். 

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அவர் பல சமூகப் பிரச்சினைகள் பற்றி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். சமீபத்தில் லைஃப் ஆஃப் பை எனும் பேக்கரி கம்பெனியை துவங்கி செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் மட்டுமல்லாமல் பிற மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார் வரலக்ஷ்மி. 

சமீபத்தில் வெளியூர் செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு பொருட்கள் வழங்கி உதவி செய்தார் வரலக்ஷ்மி. சமூக வலைதளங்களில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசுவது மட்டுமின்றி அதிக தேவை இருக்கும் மக்களுக்கும் அவர் உதவி வருகிறார். சேவ் சக்தி (Save Shakti) பவுண்டேஷன் சார்பாக பசியால் வாடும் நாய், மாடு உள்ளிட்ட வாயில்லா ஜீவன்களுக்கும் வரலட்சுமி சரத்குமார் அவரது தாய் சாயா தேவி உணவளித்தும், மருத்துவ உதவிகளையும் செய்து வருகிறார்கள். 

சென்ற லாக்டவுனில் வரலக்ஷ்மியின் நடிப்பில் டேனி திரைப்படம் வெளியானது. நேரடியாக Zee5 தளத்தில் வெளியான இந்த படம் அமோக வரவேற்பை பெற்றது. இந்த படத்தை சந்தான மூர்த்தி இயக்கியிருந்தார். பிஜி மீடியா வொர்க்ஸ் சார்பில் ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா இப்படத்தை தயாரித்தார். இப்படத்தில் வரலட்சுமியுடன் சாயாஜி ஷிண்டே, வேல ராமமூர்த்தி, அனிதா சம்பத் ஆகியோர் நடித்தனர். க்ரைம் திரில்லராக உருவான இப்படத்தில் வரலட்சுமி செய்த ஸ்டண்ட் காட்சிகள் பெரிதும் பேசப்பட்டது. 

தற்போது இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார் வரலக்ஷ்மி சரத்குமார். கண்ணாமூச்சி என்கிற படத்தை இயக்கி, நடிக்கிறார் வரலட்சுமி. ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் அந்த படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார். கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது. 

இதை த்ரிஷா, ஹன்சிகா, சுஹாசினி மணிரத்னம், மஞ்சிமா மோகன், ரகுல் ப்ரீத் சிங், சயீஷா, ஸ்ருதி ஹாசன், சாய் பல்லவி, டிடி, சிம்ரன், காஜல் அகர்வால், சினேகா, ராய் லட்சுமி, தமன்னா, கிருத்திகா உதயநிதி, ஹேமா ருக்மணி, ஆண்ட்ரியா, அக்ஷரா ஹாசன், அதிதி ரவீந்திரநாத், சின்மயி, ரெஜினா கசாண்ட்ரா, கீதாஞ்சலி செல்வராகவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் என நட்சத்திர பட்டாளமே சேர்ந்து ட்விட்டரில் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

வரலக்ஷ்மி எடுத்துள்ள இந்த முடிவிற்கு ரசிகர்கள் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் இல்லாத நடிகை ஜோதிகா மற்றும் சங்கீதா விஜய், இந்த போஸ்டருடன் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளனர். இயக்குனராக கால் பதிக்கும் வரலக்ஷ்மியை வாழ்த்துவதில் பெருமை கொள்கிறது நம் கலாட்டா.