தற்போது இந்தியாவின் டாக் ஆப் தி டவுனாக இருந்து வருவது மறைந்த நடிகர் சுஷாந்த் சிங்கின் கடைசி படமான Dil Bechara தான்.ஜூலை 24ஆம் தேதி மாலை ரிலீசானது முதல் இந்த படத்தை பலரும் கொண்டாடி வருகின்றனர்.இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.இவரது இசையில் பாடல்கள் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தின் வெற்றிக்கு ரஹ்மானின் இசை ஒரு முக்கிய பங்கு என்று பலரும் பாராட்டி வருகின்றனர்.

சுஷாந்தின் மறைவுக்கு பிறகு பலரும் பாலிவுட்டில் தங்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது என்று வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர்.சமீபத்தில் ரேடியோ சேனல் ஒன்றிற்கு Dil Bechara குறித்து பேட்டி அளித்த ரஹ்மான் , தனக்கும் இது போல பல சம்பவங்கள் நடந்துள்ளது என்றும் Dil Bechara படத்திற்கு தான் இயக்குனரிடம் பாடல்கள் வழங்கியபோதும் அவர் ஆச்சரியப்பட்டு உங்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டாம் என்றும் , அவர் பாடல் தர லேட் செய்வார் என்றும் பலர் புகாரளித்தனர் ஆனால் நீங்கள் அவர்கள் கூறிய கருத்திற்கு மாறாக இருக்கிறீர்கள் என்று தெரிவித்தார் என்பதை ரஹ்மான் பகிர்ந்துகொண்டார்.மேலும் தான் செலெக்ட்டிவ் ஆக படங்கள் செய்யவில்லை என்றும்,நல்ல படங்களை ஒதுக்கவில்லை என்றும் அவர் விளக்கமளித்தார்.தனக்கு அது போன்ற நல்ல படங்கள் வரக்கூடாது என்று ஒரு கூட்டமே தனக்கு எதிராக வேலை செய்கிறது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்திய சினிமாவின் மிகப்பெரிய ஜாம்பவான்களில் ஒருவரான ஏ.ஆர்.ரஹ்மானுக்கே இந்த நிலைமை என்றால் மற்றவர்கள் நிலைமை என்ன என்று ரசிகர்கள் பலரும் ஏ.ஆர்.ரஹ்மானிற்கு ஆதரவாக சமூகவலைத்தளங்களில் குரல் கொடுத்து வருகின்றனர்.மேலும் நீங்கள் தமிழகத்தின் சொத்து என்று பல ரசிகர்களும் ஏ.ஆர்.ரஹ்மான் குறித்து பகிர்ந்து வருகின்றனர்.ரசிகர்கள் மட்டுமின்றி பல பிரபலங்களும் ரஹ்மானிற்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர்.

அந்த வரிசையில் தற்போது கவிப்பேரரசு வைரமுத்து இணைந்துள்ளார்.ரஹ்மானின் நண்பரும்,அவருடன் பல படங்களில் வேலை செய்தவருமான வைரமுத்து தற்போது ரஹ்மானிற்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.இது குறித்து அவர் பதிவிட்டுள்ள டீவீட்டில் வட இந்திய திரையுலகம் தமிழ்நாட்டு பெண் கலைஞர்களை ஆதரிக்கும் அளவுக்கு ஆண் கலைஞர்களை ஆதரிப்பதில்லை , அவற்றிக்கு நிறைய எடுத்துக்காட்டுகள் உள்ளன அதனால் நீங்கள் அச்சப்படவேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.மேலும் உங்கள் எல்லை வடக்கு மட்டும் இல்லை என்றும் அவர் ரஹ்மானிற்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.இருந்தாலும் இவரது ட்வீட் ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வைரமுத்து உலகமே போற்றும் ஒரு பெரும் கவிஞர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றாலும் அவர் மீது சுமத்தப்பட்ட மீ டூ குற்றச்சாட்டுக்கு பிறகு அவரது பட வாய்க்கள் வெகுவாக குறைந்தன.தன்னுடைய ஆஸ்தான கூட்டணியாக ரஹ்மான் மற்றும் மணிரத்னம் இணையும் பொன்னியின் செல்வன் படத்தில் கூட வைரமுத்து இடம்பெறவில்லை.மீ டூ விவகாரத்தை அடுத்து வைரமுத்துவுடன் வேலை பார்ப்பதை ரஹ்மான் தவிர்த்து வந்தார்.இது குறித்து அவரது தங்கை ரிஹானா ஒரு பேட்டியில் பேசிய பொழுது கூட ரஹ்மான் சர்ச்சையை ஏற்படுத்தும் அல்லது ஈடுபடும் பிரபலங்களுடன் பணியாற்றமாட்டார் என்று தெளிவுபடுத்தினார்.

இந்நிலையில் மீ டூ விவகாரம் சற்று ஓய்ந்துள்ள நிலையில் ரஹ்மானுக்கு ஆதரவு அளிப்பதற்காக அவர் பதிவிட்ட டீவீட்டில்  மீண்டும் வைரமுத்து பெண்கள் குறித்த ஒரு சர்ச்சையான கருத்தை கூறியுள்ளது நெட்டிசன்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. வைரமுத்துவின் இந்த சர்ச்சை கருத்து பூதாகரமாக வெடிக்குமா இல்லையா என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்