தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான நடிகர் போண்டாமணி சிறுநீரக செயலிழப்பு காரணமாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். முன்னதாக நடிகர் போண்டாமணியை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியம் அவர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யும் கட்டத்தில் இருக்கும் நடிகர் போண்டா மணிக்கு உறவினர்கள் மூலமாகவோ அல்லது உறுப்பு தான ஆணையத்தின் மூலமாகவோ சிறுநீரகம் பெற அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் எனவும் அதற்கு தேவையான அனைத்து மருத்துவ சிகிச்சைகளும் முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் இலவசமாக செய்யப்படும் என்றும் அமைச்சர் திரு.மா.சுப்ரமணியம் அவர்கள் தெரிவித்தார்.

தொடர்ந்து தமிழ் திரையுலகைச் சார்ந்த பல பிரபலங்களும் நடிகர் போண்டா மணியின் சிகிச்சைக்கு உதவி வருகின்றனர். அந்த வகையில் வரும் நடிகருமான மனோபாலா நடிகர் சங்கத்தின் சார்பில் போண்டாமணி நேரில் சந்தித்து நிதி உதவி வழங்கினார். இதனையடுத்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு போண்டா மணியுடன் பேசி நலம் விசாரித்ததோடு ஒரு லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கியுள்ளார்.

தனது திரைப்பயணத்தில் அதிகமாக வைகைப்புயல் வடிவேலு உடன் இணைந்து காமெடியில் கலக்கிய போண்டா மணியின் சிகிச்சைக்காக தானும் உதவுவதாக வடிவேலு அவர்கள் தெரிவித்துள்ளார். இன்று (செப்டம்பர் 23)திருச்செந்தூர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகர் வடிவேலு செய்தியாளர்களை சந்தித்தபோது “போண்டா மணிக்கு என்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் கட்டாயமாக செய்வேன்" என தெரிவித்துள்ளார்.