தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் எஸ்.கே ப்ரெடக்‌ஷன் என்கிற தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தரமான படங்களை தயாரித்து ரிலீஸ் செய்து  வருகிறார். சிவகார்த்திகேயன் தயாரித்த முதல் திரைப்படமான கனா ரசிகர்களின் ஆதரவை பெற்று வியாபார ரீதியாகவும்  மாபெரும் வெற்றியடைந்தது. 

பின்னர் சிவகார்த்திகேயன் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா என்ற படத்தை தயாரித்தார். இந்த படமும் ரசிகர்கள் இடையே வரவேற்பை பெற்றது. அவர் தயாரிக்கும் அடுத்த படம் வாழ். அருவி திரைப்படத்தின் இயக்குனர் அருண்பிரபு இயக்கும் இப்படத்திற்கு பிரதீப் குமார் இசையமைக்கிறார். ஷெல்லி ஒளிப்பதிவு செய்ய, ரேமண்ட் படத்தொகுப்பு செய்கிறார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் மூன்றாவதாக உருவாகும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 

வாழ் திரைப்படத்தின் டீஸர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களை ஈர்த்தது. குறிப்பாக இதன் காட்சியமைப்பு கண்களுக்கு விருந்தாக அமைந்தது. தற்போது இதன் முதல் பாடலான ஆஹா, வரும் செப்டம்பர் 7-ம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பை படக்குழுவினர் தெரிவித்தனர். 

சிவகார்த்திகேயன் தற்போது டாக்டர் படத்தில் நடித்துள்ளார். ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்த டாக்டர் படத்தின் செல்லம்மா என்ற பாடல் சமீபத்தில் வெளியானது. நெல்சன் திலீப்குமார் இயக்கிய இந்த படத்தில் SK ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் அறிமுகமாகிறார். யோகிபாபு முக்கிய ரோலில் நடிக்கிறார். இந்தப் பாடலின் வரிகள் இன்றைய இளைஞர்களை கவரும் விதமாக உருவாக்கப்பட்டிருந்த நிலையில் பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்திருக்கிறது. டிக்டாக் பேன் செய்த நேரத்தில் சரியாக வந்து அமைந்தது இந்த பாடல். 

இதைத்தொடர்ந்து ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் படம் அயலான். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். 24AM ஸ்டுடியோஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. கருணாகரன், இஷா கோபிகர், பாலசரவணன் ஆகியோர் உள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இப்படத்தின் CG பணிகள் ஒருபக்கம் இருக்க, படப்பிடிப்பும் மீதம் உள்ளது போல் தெரிகிறது.