கடந்த 2012-ம் ஆண்டு ராஜேஷ் இயக்கத்தில் வெளியான ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படம் மூலம் ஹீரோவாக கால் பதித்தவர் உதயநிதி. அதைத்தொடர்ந்து இது கதிர்வேலன் காதல், நண்பேன்டா, கெத்து, சரவணன் இருக்க பயமேன் போன்ற படங்களில் நடித்தார். உதயநிதி நடிப்பில் வெளியான மனிதன் திரைப்படம் இவரது நடிப்பை உலகிற்கு எடுத்துக்காட்டியது. அதன் பிறகு நிமிர் படத்தில் அசத்தினார். மசாலா நிறைந்த கமர்ஷியல் படங்கள் செய்தாலும், நடிப்பிற்கு முக்கியதுவம் உள்ள படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். 

இந்நிலையில் உதயநிதியின் புதிய படத்தின் அறிவிப்பு தற்போது வெளியானது. தடையறத் தாக்க, மீகாமன், தடம் போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய இயக்குனர் மகிழ் திருமேனி இந்த படத்தை இயக்குகிறார். ரெட் ஜெயண்ட் மூவிஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. உதயநிதி ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கிறார். தென்னிந்திய நாயகிகளில் கொடி கட்டி பறக்கும் ஹீரோயின் ஆவார். பூமி, ஈஸ்வரன் என தொடர்ந்து வரிசையாக படங்களில் கமிட்டாகி வருகிறார். 

ப்ரோடக்ஷன் நம்பர் 14 என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தின் டைட்டில் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரோல் கோரெல்லி இந்த படத்திற்கு இசையமைக்கிறார். மதன் கார்க்கி பாடல் வரிகள் எழுதுகிறார். படத்தின் படப்பிடிப்பு பணிகளும் துவங்கியுள்ளதாம். படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் பற்றிய விவரம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த ஆண்டின் துவக்கத்தில் மிஸ்கின் இயக்கத்தில் வெளியான சைக்கோ படத்தில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் உதயநிதி. தொடர்ந்து வித்தியாசமான ஸ்கிரிப்ட்டுகளை தேர்தெடுத்து நடித்து வரும் இவர், முதல் முறையாக மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்ற செய்தி திரை ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. 

அருண் ராஜா இயக்கத்தில் ஆர்டிகிள் 15 தமிழ் ரீமேக்கில் நடிக்கவுள்ளார் உதயநிதி. இந்த படத்தில் ஆயுஷ்மான் குரானா நடித்த கதாபாத்திரத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கவுள்ளார் இந்தப் படத்தினை போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து வழங்க, ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.