கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக தொடர்ந்து தென்னிந்திய திரை உலகில் முன்னணி நட்சத்திர நாயகியாகவும் ஃபேவரட் ஹீரோயினாகவும் திகழும் நடிகை த்ரிஷா இன்று (மே 4) தனது 39வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். நாயகி த்ரிஷாவுக்கு கலாட்டா குழுமம் தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

முன்னதாக மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் உடன் இணைந்து இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மலையாளத்தில் ராம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வரும் நடிகை த்ரிஷா, தற்போது பிருந்தா எனும் புதிய வெப்சீரிஸிலும் நடித்து வருகிறார். இதில் த்ரிஷா காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே இந்திய திரையுலகமே மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கும் இயக்குனர் மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை எனும் மிக முக்கிய கதாபாத்திரத்தில் த்ரிஷா நடித்துள்ளார். இரண்டு பாகங்களாக வெளிவர உள்ள பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி ரிலீஸாக உள்ளது.

இந்த வரிசையில் இயக்குனர் அருண் வசீகரன் இயக்கத்தில் அதிரடி ஆக்ஷன் படமாக தயாராகும் தி ரோட் திரைப்படத்தில் த்ரிஷா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 2000-களில் மதுரையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து, இழப்பதற்கு எதுவும் இல்லாத ஒரு பெண் ரத்த பூமியில் மேற்கொள்ளும் ஆக்ரோஷமான பயணத்தை கருவாகக் கொண்டு தயாராகும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மதுரை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் த்ரிஷா உடன் இணைந்து “டான்சிங் ரோஸ்” சபீர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க சந்தோஷ் பிரதாப், மியா ஜார்ஜ், M.S.பாஸ்கர், வேல ராமமூர்த்தி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். AAA சினிமா தயாரிக்கும் தி ரோட் படத்திற்கு சாம்.CS இசையமைக்கிறார். இந்நிலையில் நடிகை திரிஷாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பரிசளிக்கும் விதமாக படக்குழுவினர் தி ரோட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். தி ரோட் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ…