தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை த்ரிஷா, தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி கிட்டத்தட்ட 20 ஆண்டுகளை நெருங்கிவிட்டார். அடுத்ததாக மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் கதாநாயகனாக நடித்து வரும் ராம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

முன்னதாக இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை எனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் த்ரிஷாவின் நடிப்பில் கர்ஜனை, சதுரங்க வேட்டை 2, ராங்கி ஆகிய திரைப்படங்கள் நிறைவடைந்து விரைவில் திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து தற்போது வெப்சீரிஸ்-ல் களமிறங்குகிறார் நடிகை த்ரிஷா. அன்ட் ஸ்டோரிஸ் தயாரிப்பில் ஆஷிஷ் கொல்லா மற்றும் அவினாஷ் கொல்லா இன்று தயாரிக்கும் பிருந்தா வெப் சீரிஸில் நடிகை த்ரிஷா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜெய் கிருஷ்ணா கதை,திரைக்கதை எழுதியுள்ளார். 

தெலுங்கில் தயாரிக்கப்பட்டு பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு விரைவில் சோனி லைவ் (Sony LIV) OTT தளத்தில் வெளிவரவுள்ள நடிகை த்ரிஷாவின் பிருந்தா வெப் சீரிஸை இயக்குனர் சூர்யா வங்களா இயக்குகிறார். சக்திகாந்த் கார்த்திக் ஒளிப்பதிவு செய்கிறார். இந்நிலையில் நேற்று த்ரிஷாவின் பிருந்தா வெப்சீரிஸ் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.