ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று முதல் 2 மாதத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் உத்தரவிட்டுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் வரும் 11 ஆம் தேதி இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. அதேபோல், அக்டோபர் 30 ஆம் தேதி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை நடைபெற உள்ளது. இதனால், இந்த 2 மாதங்களும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்தும் இப்பகுதியில் உள்ள அவர்களது சிலைகளுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் உள்பட பல்வேறு தரப்பினர் அஞ்சலி செலுத்த வருவார்கள்.

 

இந்நிலை யில், இந்த விழாக்களை அமைதியான முறையில் நடத்தவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வன்முறைகளைத் தடுக்கவும் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் பல்வேறு கட்டுப்பாடுகளை அதிரடியாக விதித்துள்ளார்.

அதன்படி மாவட்டம் முழுவதும் இன்று முதல், வரும் அக்டோபர் 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் உத்தரவிட்டுள்ளார். அத்துடன், அக்டோபர் 25 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை, பிற மாவட்டங்களிலிருந்து வாடகை வாகனங்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் நுழைய அதிரடியாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அஞ்சலி செலுத்த வருபவர்கள், மாற்றுச் சமுதாயத்தினர் வசிக்கும் இடங்களுக்குச் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.