தெலுங்கு திரையுலகின் சூப்பர்ஸ்டாரும், ஜன சேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலகை சேர்ந்தவர்களும், ரசிகர்களும், அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் ஒரு சோக சம்பவம் நடந்துள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் இருக்கும் சாந்திபுரம் பகுதியில் பவன் கல்யாணின் பிறந்தநாளையொட்டி 6 ரசிகர்கள் நேற்று இரவு 8.30 மணி அளவில் பேனர் வைத்துள்ளனர். 

பேனரின் இரும்பு கம்பி லைவ் வயரை தொடவே அந்த ஆறு பேருக்கும் ஷாக் அடித்திருக்கிறது. இதில் 3 பேர் உயிர் இழந்துவிட்டனர், 3 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்கள் சோமசேகர்(30), அவரின் அண்ணன் ராஜேந்திரா(32) மற்றும் நண்பர் அருணாச்சலம்(28) என்று தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் நிதி வழங்கப்படும் என்று ஜன சேனா கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்து பவன் கல்யாண் கூறியிருப்பதாவது, பலியான 3 பேரின் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் குடும்பத்திற்கு ஆதரவாக இருப்பது என் கடமை என்று தெரிவித்துள்ளார்.

தன் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று பவன் கல்யாண் பலமுறை ரசிகர்களை கேட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால் ரசிகர்கள் இந்த விஷயத்தில் மட்டும் அவர் பேச்சை கேட்பதாக இல்லை. செப்டம்பர் 2ம் தேதி பிறந்தநாளுக்கு கடந்த ஜூன் மாதமே கொண்டாட்டத்தை துவங்கிவிட்டனர் ரசிகர்கள்.

பவன் கல்யாணுக்கு பேனர் வைக்கும் போது ரசிகர்கள் பலியானது இது ஒன்றும் முதல் முறை அல்ல. முன்னதாக கடந்த 2018ம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் பவன் கல்யாணுக்கு பேனர் வைக்கும்போது மின்சாரம் தாக்கியதில் 2 பேர் பலியானார்கள்.

பவன் கல்யாண் பிங்க் படத்தின் தெலுங்கு ரீமேக்கான வக்கீல் சாப் படத்தில் நடித்து வந்தார். கொரோனா வைரஸ் பிரச்சனையால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த படத்தில் அஞ்சலி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வக்கீல் சாப் படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். 

இந்நிலையில் பேனர் வைக்கும்போது பலியான 3 ரசிகர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ. 2 லட்சம் அளிக்கப்படும் என்று போனி கபூர் அறிவித்துள்ளார். பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்கான நேர்கொண்ட பார்வை படத்தையும் போனி கபூர் தான் தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.