தொலைக்காட்சி பிரியர்களின் தனி உலகம் இந்த சீரியல். பார்வையாளர்களை கூட பக்கத்து வீட்டுக்காரர்களாக மாற்றும் ஜாலம் சீரியலில் உள்ளது. அப்படி தமிழ் மக்களின் வாழ்வியலில் சீரியல் என்பது அங்கமாக மாறிவிட்டது. தொலைக்காட்சி திரையில் வரும் காட்சிகளை நிஜ வாழ்வுடன் ஒப்பிட்டு கணக்கு போடும் மனிதர்கள் ஏராளம். 

ஒரு சில சீரியல்கள் மட்டுமே முதியவர்கள், இளைஞர்கள் என இரு தரப்பினரையும் கவரும். அப்படி தமிழ் மக்களை கவர்ந்து இதயத்துடிப்பாய் விளங்கும் திருமணம் சீரியல் பற்றிய பதிவு தான் இது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இத்தொடரில் நாயகியாக ஸ்ரேயாவும் நாயகனாக சித்துவும் அறிமுகமாகினார்கள். 

மங்களூரைச் சேர்ந்த ஸ்ரேயா விளம்பரப்படங்களில் நடித்தவர். சித்து டப்ஸ்மாஷ் மூலம் பிரபலமானவர். பிதாமகன், ரஜினி முருகன், சீமராஜா உள்ளிட்ட முன்னணித் திரைப்படங்களின் ஒளிப்பதிவாளரான பாலசுப்ரமணியம் இத்தொடரில் ஒளிப்பதிவு மேற்பார்வை செய்கிறார். யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் உள்ளிட்ட முன்னணி படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்க மேற்பார்வை செய்ய என ஆரம்பமே அமக்களம் தான். அத்தியாயம் 1 முதல் 76 வரை மித்ரன் ஜவஹர் இயக்கினார். அதன் பிறகு அத்தியாயம் 77 முதல் அழகர் பெருமாள் இயக்கி வருகிறார்.  

மற்ற திருமணங்களைப் போல இல்லாமல், ஜனனி - சந்தோஷ் திருமணம், அவர்கள் விருப்பம் இல்லாமலேயே நடக்கிறது. தங்கள் பெற்றோர்களின் விருப்பங்களைப் பூர்த்தி செய்வதற்காக இருவரும் திருமண பந்தத்தில் இணைகின்றனர். அன்பு, வெறுப்பு கலந்த உறவாகத் தொடங்கும் இவர்களின் வாழ்க்கையில், போகப்போக காதலும் ரொமான்ஸும் துளிர்க்கிறது. அந்தக் காதல் நீடித்ததா? என்பதுதான் திருமணம் சீரியலின் கதை.

திருமணம் சீரியலை பற்றி கூறவேண்டுமானால் சரியான காஸ்டிங், கச்சிதமான காட்சிகள், காட்சிகளின் நாடியறிந்து வரும் பின்னணி இசை என ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறது. இதனாலே சந்தோஷ் மற்றும் ஜனனயை அவர்களது வீட்டில் ஒருவராக பார்த்து வருகின்றனர் ரசிகர்கள். 

மொத்தத்தில் திருமணம் வெறும் சீரியல் என்று சொல்லி விட முடியாது. இது உறவுகளைக் கொண்டாடும் தொடராகும். ஒவ்வொரு குடும்பத்தின் அங்கமாக திகழும் திருமணம் சீரியல் இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இந்த பொன்னான நாளில் திருமணம் தொடரின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை பாராட்டுவது கலைக்கு நாம் செலுத்தும் மரியாதையாகும். ரசிகர்களின் விழிகளுக்கு எண்ணற்ற வண்ணங்களை சேர்க்கும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சிக்கும் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறது நம் கலாட்டா.