சூது கவ்வும் திரைப்படம் மூலமாக அறிமுகமானவர் நடிகர் அசோக் செல்வன். பின்னர் பீட்சா II, வில்லா, தெகிடி போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர். இதன்பின் இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன், விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளியான படம் ஓ மை கடவுளே. இந்த படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இதையடுத்து இயக்குனர் சசி இயக்கி வரும் தீனி படத்தில் அசோக் செல்வன், நித்யா மேனன், ரிது வர்மா நடித்து வருகிறார்கள்.. இதன் ட்ரைலர் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது. தனுஷ் இந்த ட்ரைலரை வெளியிட்டார். அனி ஐ.வி. சசி இயக்கும் இப்படத்தினை பாபிநீடுபி வழங்குகிறார். மேலும் தென்னிந்தியாவின் பிரபல நிறுவனங்களான, ஸ்ரீ வெங்டேஷ்வரா சினி சித்ரா எல் எல் பி மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இப்படத்தினை தயாரிக்கின்றன. 

பிரேமம் படத்தில் சூப்பர்ஹிட் பாடல்களை கொடுத்த ராஜேஷ் முருகேசன் தான் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் பற்றி தயாரிப்பாளர் பிவிஎஸ்என் பிரசாத் கூறியிருப்பதாவது: இது முழுக்க உணர்வுபூர்வமான காதல் கொண்ட, முழுக்க முழுக்க காமெடி நிறைந்த அட்டகாசமான பொழுது போக்கு திரைப்படம். அசோக் செல்வன், நித்யா மேனன், ரிது வர்மா நடித்திருக்கும் காட்சிகள் ரசிகர்கள் அனைவரையும் வசீகரிக்கும் என்று தெரிவித்துள்ளார். 

படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுதும் முடிக்கப்பட்டு, போஸ்ட் புரடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறதாம். விரைவில் படத்தின் திரைவெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு வெளியிடப்படும். இப்படத்தை திவாகர் மணி ஒளிப்பதிவு செய்கிறார். ஶ்ரீமணி பாடல்கள் எழுதுகிறார். நாக சந்தா, அனுஷா, ஜெயந்த் பனுகண்டி வசனம் எழுதுகின்றனர். ஶ்ரீ நாகேந்திரா தங்கலா அரங்கம் அமைக்கிறார். நவீன் நூலி எடிட்டிங் செய்கிறார். 

உடல் எடை அதிகரித்து, சமையல் செய்யும் செஃப்பாக அசத்தியிருக்கிறார் அசோக் செல்வன். வித்தியாசமாக கதைகளை தேர்வு செய்யும் அசோக் செல்வனை பாராட்டி வருகின்றனர் திரை ரசிகர்கள்.