விளம்பர படங்களில் சினிமா நட்சத்திரங்களும், பிரபல மாடல்களும் நடிப்பதுதான் வழக்கம். ஆனால் தற்போது பல முன்னணி நிறுவனங்களின் நிறுவனர்களே அவர்களது விளம்பர படங்களில் நடிக்கின்றனர். இந்த புதிய ட்ரெண்டை உருவாக்கியவர் தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனர் திரு.சரவணன் அவர்கள்.

ஆரம்பத்தில் இவர் நடித்த விளம்பர படங்களின் மீது நிறைய எதிர்மறை விமர்சனங்களும் உருவ கேலியும் செய்யப்பட்டபோதும் தன்மீது ஏவப்பட்ட அத்தனை எதிர்மறை விமர்சன கற்களையும் முன்னேற்றத்திற்கான படிகளாக மாற்றிய தி லெஜண்ட் சரவணன் அவர்கள் தற்போது தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

பிரபல இயக்குனர்கள் ஜேடி மற்றும் ஜெர்ரி இயக்கத்தில் தி லெஜண்ட் சரவணன் நடித்துள்ள திரைப்படம் தி லெஜண்ட். இப்படத்தில் லெஜண்ட் சரவணன் உடன் இணைந்து பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌடெலா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக், பிரபு, நாசர், யோகி பாபு, ரோபோ சங்கர் & மயில்சாமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

தி லெஜன்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரோடக்சன்ஸ் சார்பில் லெஜண்ட் சரவணன் தயாரித்து நடிக்கும் தி லெஜன்ட் படத்திற்கு R.வேல்ராஜ் ஒளிப்பதிவில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். முன்னதாக தி லெஜண்ட் படத்தின் முதல் பாடலாக மொசலோ மொசலு பாடல் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் 2-வது பாடலாக வாடிவாசல் பாடல் வருகிற மே 20ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.