பொதுவாக எந்த ஒரு நிறுவனத்தின் விளம்பர படங்களிலும் சினிமா நட்சத்திரங்களும், பிரபல மாடல்களும் நடிப்பதுதான் வழக்கம். ஆனால் தனது நிறுவனத்தின் விளம்பர படத்தில் தானே நடித்து புதிய ட்ரெண்டை உருவாக்கியவர் தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனர் திரு.சரவணன் அவர்கள். இதன் எதிரொலியாக தற்போது பல முன்னணி நிறுவனங்களின் விளம்பர படங்களில் அதன் நிறுவனர்களே நடிக்கின்றனர். 

எதிர்மறை விமர்சனங்கள், உருவ கேலி என தன்மீது ஏவப்பட்ட அத்தனை விமர்சனங்களையும் தவிடுபொடியாக்கிய தி லெஜண்ட் சரவணன் அவர்கள் தற்போது தமிழ் திரையுலகில் கதாநாயகனாக களமிறங்கியுள்ளார். பிரபல இயக்குனர்கள் ஜேடி மற்றும் ஜெர்ரி இயக்கத்தில் தி லெஜண்ட் சரவணன் நடித்துள்ள திரைப்படம் தி லெஜண்ட். 

தி லெஜன்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரோடக்சன்ஸ் சார்பில் லெஜண்ட் சரவணன் தயாரித்து நடிக்கும் தி லெஜண்ட் படத்தில் லெஜண்ட் சரவணன் உடன் இணைந்து பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌடெலா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக், பிரபு, நாசர், யோகி பாபு, ரோபோ சங்கர் & மயில்சாமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

தி லெஜன்ட் படத்திற்கு R.வேல்ராஜ் ஒளிப்பதிவில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளிவரவுள்ள தி லெஜண்ட் திரைப்படம் வருகிற ஜூலை 28ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.