தற்போதைய நிலையில் பல முன்னணி நிறுவனங்களின் உரிமையாளர்கள் அந்த நிறுவனங்களின் விளம்பரப் படங்களில் நடிக்கும் இந்த புதிய ட்ரெண்டை தொடங்கி வைத்தவர் லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனர் லெஜண்ட் சரவணன் அவர்கள். தன்னம்பிக்கைக்கும் கடின உழைப்புக்கும் அடையாளமாய் விளங்கும் லெஜண்ட் சரவணன் அவர்கள் தற்போது தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார்.

தி லெஜன்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரோடக்சன்ஸ் சார்பில் லெஜண்ட் சரவணன் தயாரித்து நடிக்கும் தி லெஜண்ட் படத்தில் பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌடெலா கதாநாயகியாக நடிக்க, மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக், பிரபு, நாசர், யோகி பாபு, ரோபோ சங்கர் & மயில்சாமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இயக்குனர்கள் ஜேடி மற்றும் ஜெர்ரி இணைந்து இயக்கியுள்ள தி லெஜன்ட் படத்திற்கு R.வேல்ராஜ் ஒளிப்பதிவில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். கோபுரம் சினிமாஸ் சார்பில் தயாரிப்பாளர் G.N.அன்புச்செழியன் அவர்கள் வெளியிட தி லெஜண்ட் திரைப்படம் வருகிற ஜூலை 28ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. 

பிரமாண்டமாக 2500 திரையரங்குகளில் தி லெஜண்ட் திரைப்படம் ரிலீஸாகவுள்ள நிலையில், வருகிற ஜூலை 28ம் தேதி காலை 4 மணிக்கு முதல் நாள் முதல் காட்சி தமிழகத்தின் பல முன்னணி தியேட்டர்களில் திரையிடப்பட உள்ளது. சென்னையின் வடபழனியில் உள்ள கமலா திரையரங்கில் 4மணி காட்சி திரையிடப்படவுள்ள நிலையில், பிற முன்னணி திரையரங்குகளிலும் திரையிடப்படும் என தெரிகிறது.

பொதுவாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய், உலகநாயகன் கமல்ஹாசன், அஜித் குமார், சீயான் விக்ரம், சூர்யா, தனுஷ், சிலம்பரசன்TR, சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நட்சத்திர நாயகர்களுக்கு மட்டுமே அதிகாலை சிறப்புக் காட்சிகள் திரையிடப்பட்டு வந்த நிலையில் தனது முதல் படமான தி லெஜன்ட் படத்திலேயே லெஜண்ட் சரவணன் அவர்களின் படத்திற்கு இப்படி ஒரு அங்கீகாரம் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.