தன்னம்பிக்கைக்கும் கடின உழைப்புக்கும் பெரும் எடுத்துக்காட்டாகவும் தமிழகத்தின் முன்னணி தொழில் நிறுவனத்தின் நிறுவனராகவும் திகழ்பவர் லெஜண்ட் சரவணன்.  இன்றைய சூழலில் பல முன்னணி தொழில் நிறுவனங்களின் நிறுவனர்கள் தங்களது நிறுவனத்திற்கான விளம்பரப் படங்களில் தாங்களே நடிக்க, முக்கிய காரணமாக அமைந்தவர் லெஜண்ட் சரவணன்.

தனது நிறுவனத்தின் விளம்பர படங்களில் தானே நடித்து புதிய ட்ரெண்டை தொடங்கி வைத்த சரவணன் மீது பலவிதமான எதிர்மறை விமர்சனங்கள் இருந்த போதும் அதைப் பற்றி துளியும் கவலைப்படாமல் தொடர்ந்து தனது விளம்பர படங்களில் நடித்து தமிழக மக்கள் மத்தியில் மிகப் பிரபலமடைந்தார்.  இதன் தொடர்ச்சியாக தற்போது தமிழ் திரை உலகில் கதாநாயகனாகவும் தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார் லெஜண்ட் சரவணன்.

முன்னதாக உல்லாசம் மற்றும் விசில் ஆகிய திரைப்படங்களை இயக்குனர் ஜோடியான இயக்குனர்கள் ஜேடி மற்றும் ஜெர்ரி இணைந்து இயக்கும் தி லெஜன்ட் திரைப்படத்தின் மூலம் லெஜண்ட் சரவணன் கதாநாயகனாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார். பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌடெலா கதாநாயகியாக நடிக்க, மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக், பிரபு, நாசர், யோகி பாபு, ரோபோ சங்கர் & மயில்சாமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

தி லெஜன்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரோடக்சன்ஸ் சார்பில் லெஜண்ட் சரவணன் தயாரித்து நடிக்கும்  தி லெஜன்ட் படத்திற்கு  R.வேல்ராஜ் ஒளிப்பதிவில்இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இந்நிலையில் தி லெஜன்ட் திரைப்படத்தின் முதல் பாடலாக மொசலோ மொசலு பாடல் தற்போது வெளியானது. கலக்கலான அந்த பாடல் இதோ…