கடந்த 2019-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் ஆன்ட்ராய்டு குஞ்சப்பன். இதன் தமிழ் ரீமேக் உரிமையை கே.எஸ்.ரவிக்குமார் வாங்கியிருந்தார். இத்திரைப்படம் தமிழில் கூகுள் குட்டப்பன் எனும் டைட்டிலுடன் உருவாகிறது. கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவியாளர்களாக பணியாற்றிய சபரி மற்றும் சரவணன் இயக்கும் இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். மதன் கார்க்கி பாடல்கள் எழுத ப்ரவீன் ஆண்டணி படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.

இத்திரைப்படத்தில் பிக்பாஸ் புகழ் தர்ஷன் மற்றும் லாஸ்லியா இணைந்து நடிக்கின்றனர். இவர்களுடம் நடிகர் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் தர்ஷனுக்கு அப்பாவாக கே.எஸ்.ரவிக்குமார் நடிக்கிறார். கதைப்படி வெளிநாட்டில் இருக்கும் மகனாக தர்ஷனும், அவர் காதலிக்கும் இலங்கை தமிழ் பெண் கேரக்டரில் லாஸ்லியா நடிக்கிறார். இன்று இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது.

பிக்பாஸ் 3-வது சீசனில் தர்ஷனின் நடவடிக்கைகளைப் பார்த்து அவரை பிக்பாஸ் மேடையில் வைத்து புகழ்ந்து பேசிய நடிகர் கமல்ஹாசன், ராஜ்கமல் ஃபிலிஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் தர்ஷனுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று உறுதியளித்தார். இதையடுத்து தாய்க்குப்பின் தாரம் என்ற மியூசிக் ஆல்பத்தில் நடித்த தர்ஷனுக்கு தற்போது கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில் கூகுள் குட்டப்பன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. 

அதேபோல் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு பிரெண்ட்ஷிப் உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்து வரும் லாஸ்லியா தற்போது தர்ஷனுடன் இணைந்து நடிக்கிறார். பிக்பாஸ் 3-வது சீசனில் பங்கேற்ற தர்ஷன் மற்றும் லாஸ்லியா ஆகிய இருவருக்குமே ஏராளமான ரசிகர்கள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

படம் குறித்து KS ரவிகுமார் கூறியதாவது, சபரியும், சரவணனும் என்னிடம் 10 ஆண்டுகளாக உதவி இயக்குநர்களாக இருந்துள்ளனர். அவர்கள் ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25 படத்தை தமிழில் ரீமேக் செய்ய விரும்பினார்கள். அந்த படத்தில் ஹீரோவின் தந்தையாக நடிக்க வேண்டும் என்று என்னை அணுகினார்கள். ஆனால் அவர்களுடன் வேலை செய்யவிருந்த தயாரிப்பாளரால் அதை செய்ய முடியவில்லை. அந்த தயாரிப்பாளரால் படத்தின் ரீமேக் உரிமையை வாங்க முடியவில்லை.

அதனால் நான் அந்த படத்தின் ரீமேக் உரிமையை வாங்கியிருக்கிறேன். தெனாலிக்கு பிறகு 21 ஆண்டுகள் கழித்து தயாரிப்பாளர் பொறுப்பேற்றிருக்கிறேன் என்றார்.

தர்ஷன் என் மகனாக நடிக்கிறார். லோஸ்லியா தான் ஹீரோயின். யோகி பாபு நண்பராக நடிக்கிறார். பிரான்க்ஸ்டர் ராகுல் தான் வில்லன். பிப்ரவரி மாதம் 15ம் தேதி படப்பிடிப்பை துவங்குகிறோம். தென்காசி, குற்றலாம் மற்றும் அதன் அருகில் உள்ள இடங்களில் ஷூட்டிங் நடக்கும். ஏப்ரல் மாதம் 10 நாட்கள் வெளிநாட்டில் படப்பிடிப்பு நடக்கும். சின்ன ரோபோ ஒன்று முக்கிய வேடத்தில் நடிப்பதால் நிறைய விஎஃப்எக்ஸ் வேலை இருக்கும் என்றார்.