சுசீந்திரன் இயக்கத்தில் சிலம்பரசன் நடித்துள்ள திரைப்படம் ஈஸ்வரன். சிலம்பரசன் ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். நந்திதா, பாரதி ராஜா, பால சரவணன் உள்ளிட்டோர் முக்கிய ரோலில் இந்த படத்தில் நடித்துள்ளனர். பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக தியேட்டர்களில் ரிலீஸாக உள்ளது இந்த படம். ஈஸ்வரன் படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் போய் கொண்டிருப்பதாக தகவல் வெளியானது. 

சிம்பு தன் உடல் எடையை குறைத்த பிறகு நடித்த முதல் படம் ஈஸ்வரன் என்பதால், திரையரங்கில் இப்படத்தினை கொண்டாட ஆவலாக உள்ளனர் சிம்பு ரசிகர்கள். இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையை 7G பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது. ஓவர்சீஸ் உரிமையை AP இன்டர்நேஷனல் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. 

ஈஸ்வரன் படத்தின் இறுதி கட்ட பணிகள் ஒருபுறம் போய் கொண்டிருக்க, படத்தின் இசையமைப்பாளர் தமன் புதிய அப்டேட் ஒன்றை கூறி, இணையத்தை அதிர வைத்தார். அவர் வெளியிட்ட பதிவில், ஈஸ்வரன் படத்தின் இசை பணிகள் முழுவதும் நிறைவடைந்து விட்டதாக கூறியுள்ளார். இயக்குனர் சுசீந்திரன் மற்றும் சிலம்பரசன் ஆகியோருக்கு தனது நன்றிகளை தெரிவித்துள்ளார். தமன் இசையமைத்த படங்களிலேயே வேகமாக முடிந்த இரண்டாம் படம் ஈஸ்வரன். இதற்கு முன்னர் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான பிஸ்னஸ்மேன் படத்திற்கு வேகமாக இசை பணிகளை முடித்தார் என்று பதிவில் கூறியுள்ளார். 

ஈஸ்வரன் படத்தின் டீஸர் மற்றும் தமிழன் பாட்டுக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. படத்தின் மீதம் இருக்கும் பாடல்கள் மற்றும் ட்ரைலர் தேதிக்காக ஆவலில் உள்ளனர் திரை ரசிகர்கள். இந்த பொங்கலுக்கு ஈஸ்வரனின் தாண்டவம் நிச்சயம் என்று கூறி ட்ரெண்ட் செய்து வருகின்றனர் சிலம்பரசன் ரசிகர்கள். 

தற்போது சபரி மலை பயணத்தில் இருக்கும் சிம்பு, விரைவில் மாநாடு படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. வெங்கட் பிரபு இயக்கி வரும் இப்படத்தில் கல்யாணி பிரியர்தர்ஷன், பிரேம்ஜி, எஸ்.ஜே. சூர்யா ஆகியோர் நடித்து வருகின்றனர். சிம்பு இல்லாத காட்சிகளை தற்போது படக்குழுவினர் படமாக்கி வருகின்றனர். கடந்த வாரம் சிம்புவின் பத்து தல படத்தின் அறிவிப்பு வெளியானது. கெளதம் கார்த்திக் மற்றும் சிலம்பரசன் இணைந்து நடிக்கும் இப்படத்தை கிருஷ்ணா இயக்கவுள்ளார். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.