தமிழ் திரையுலகின் முடிசூடா மன்னனாகவும், ரசிகர்களின் உடன்பிறவா அண்ணனாகவும் திகழ்பவர் தளபதி விஜய். ஆறிலிருந்து அறுபது வரை என அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கும் மனிதன். விஜய் எனும் மூன்றெழுத்து மந்திரம், தமிழ் திரையுலகின் தாரக மந்திரமாக ஒலிக்கிறது. படத்திற்கு படம் அவரது பாக்ஸ் ஆபீஸ் வசூல் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பல இயக்குனர்களின் ஆதர்ஷ நாயகன். 

நான்கு நாட்கள் முன்பு விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அவருக்கு ரசிகர்கள் மட்டும் பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் தளபதி விஜய்யின் பழைய வீடியோக்கள் பல சமூக வலைதளங்களில் வைரல் ஆகியது. அதில் ஒரு வீடியோவில் தன் முதல் காதல் அனுபவம் பற்றி பேசியுள்ளார் தளபதி விஜய். 

சேரன் இயக்கிய ஆட்டோகிராஃப் படத்தை பற்றி விஜய் ஒரு தொலைக்காட்சி பேட்டியில் பேசியவர், ஆட்டோகிராப் படம் தியேட்டரில் பார்த்த அனுபவம் பற்றி பேசியிருந்தார். தனது வாழ்க்கையிலும் ஆட்டோகிராப் படம் போல பல்வேறு காதல்கள் இருந்ததை படம் பார்த்துவிட்டு வெளியில் வந்த பிறகு நினைவு கூர்ந்ததாக தெரிவித்திருந்தார். 8-ம் வகுப்பு படிக்கும் போது முதன் முறையாக ஒரு ஆட்டோகிராஃப், அதன்பிறகு 12-ம் வகுப்பு படிக்கும்போது ஒன்று, அதன் பின் கல்லூரியில் ஒன்று என பல்வேறு காதல்களை கடந்துதான் வந்திருப்பதாக விஜய் பேசியுள்ளார். 

இதை பார்த்த இயக்குனர் சேரன் தளபதி விஜய் பற்றி உருக்கமாக பதிவிட்டுள்ளார். விஜய்யுடன் பணியாற்றக் கிடைத்த வாய்ப்பை மிஸ் செய்தது பற்றி வருத்தத்துடன் பேசியுள்ளார்.

அவரது பதிவில், ப்ரார்த்தனா தியேட்டரில் படம் பார்த்துவிட்டு போனில் விஜய் அவர்கள் பாராட்டியதை மறக்க முடியாது.. அதற்கு பின் அவர் என்னோடு சேர்ந்து படம் செய்யவும் ஒத்துக்கொண்டார் . நான் தான் தவமாய்தவமிருந்து படம் முடிக்காமல் இருந்ததால் இயக்க முடியாமல் போயிற்று. அந்த தவறை நான் செய்திருக்க கூடாது.. இந்த தயாரிப்பாளர் பாதிக்கப்படுவாரே என நினைத்து விஜய் படத்தை அன்று கைவிட்டது எவ்வளவு பெரிய தவறு என இப்போது உணர்கிறேன்.. இந்த தவறுக்கான வருத்தத்தை விஜய் அவர்களை பார்த்து நேரில் சொல்லிவிட நினைக்கிறேன்.. ஆனால் நேரில் சந்திக்கும்போது தெரிவிப்பேன் என்று வெளிப்படையாக கூறியுள்ளார். 

இந்த வீடியோவை கண்ட தளபதி ரசிகர்கள், நிச்சயம் இயக்குனர் சேரன் மற்றும் தளபதி காம்போ இணைந்தால், காலத்தால் அழியாத படைப்பாக இருக்கும் என்று கமெண்ட் செய்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் தளபதியும் முதல் காதல் அனுபவத்தை கடந்து தான் சென்றுள்ளாரா என்று மைண்ட் வாயிஸ் மூலம் குட்டி ஸ்டோரி கூறுகின்றனர் நெட்டிசன்கள்.