லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்த மாஸ்டர் திரைப்படம் 2021-ம் ஆண்டு பொங்கல் விழாவை முன்னிட்டு ஜனவரி 13-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ஷாந்தனு, அர்ஜுன் தாஸ், தீனா, கௌரி கிஷன் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். ராக்ஸ்டார் அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். 

சில தினங்களுக்கு முன்பு, மாஸ்டர் படத்தின் சென்சார் விவரம் தெரியவந்தது. மாஸ்டர் படத்துக்கு U/A சான்றிதழ் என்பதைப் படக்குழு அறிவித்திருந்தது. தற்போது தியேட்டர்களில் 50% இருக்கைகளை மட்டுமே நிரப்ப தமிழக அரசு அனுமதி அளித்திருக்கும் நிலையில நடிகர் விஜய் சமீபத்தில் தமிழக முதல்வரை சந்தித்து திரையரங்குகளில் நூறு சதவிகிதம் பார்வையாளர்களை அனுமதிக்குமாறு கோரிக்கை வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

முன்னதாக மாஸ்டர் ஓடிடியில் வெளியாகப் போகிறது என்கிற தகவல் வெளியாகி தீயாக பரவியது. ஆனால் அந்த தகவலில் உண்மை இல்லை என்று படக்குழுவினர் விளக்கம் அளித்தனர். அதன் பிறகே விஜய் ரசிகர்கள் நிம்மதி அடைந்தார்கள். முதல்முறையாக விஜய் சேதுபதி, விஜய்யுடன் சேர்ந்து நடித்துள்ளார், அதுவும் வில்லனாக. விஜய், விஜய் சேதுபதி மோதிக் கொள்ளும் காட்சிகளை பார்க்க தான் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

கடந்த வாரம் மாஸ்டர் படத்தின் இந்தி டைட்டில் பற்றியும், இந்தி விநியோகம் பற்றிய தகவலையும் வெளியிட்டுள்ளது படக்குழு. விஜய் தி மாஸ்டர் என இந்தியில் தலைப்பிடப்பட்டுள்ளது. XB பிலிம்ஸுடன் இணைந்து B4U மோஷன் பிக்ஸ் என்ற நிறுவனம் இந்தியில் வெளியிடுகிறது. 

மாஸ்டர் பட ட்ரைலர் புத்தாண்டிற்கு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ட்ரைலர் குறித்த அறிவிப்பு எதுவும் வரவில்லை. இந்நிலையில் புத்தாண்டு ஸ்பெஷலாக புதிய போஸ்டரை வெளியிட்டு அசத்தியுள்ளது படக்குழு. இந்த போஸ்டரை ட்ரெண்ட் செய்து வருகின்றனர் தளபதி ரசிகர்கள்.