இதயத்து அதிபதியாய் தமிழ் சினிமாவின் தளபதியாய் உயர்ந்து நிற்பவர் நடிகர் விஜய். தனது 26 ஆண்டு கால நடிப்பால் 6 லிருந்து 60 வரை உள்ள அனைத்து தரப்பு ரசிகர்களையும் தனது சீரான நடிப்பால், வீட்டில் ஓர் அங்கமாய் விளங்கிவருகிறார். நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் ஆங்கில குறும்படமான ஜங்ஷன் படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் நடித்தது மட்டுமல்லாமல் அவரே இயக்கியுள்ளார் என்பது கூடுதல் தகவல். 

நிகழ்ச்சி தொகுப்பாளராக சமீபத்தில் உருவெடுத்த சஞ்சய் சில நாட்கள் கழித்து Siri எனும் குறும்படத்தை இயக்கி நடித்தார். இவர் விரைவில் திரையுலகில் கால்பதித்து தனது தந்தைக்கும், தமிழ் திரைக்கும் பெருமை சேர்ப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் சஞ்சய் விஜய் வீடியோ கேம்ஸ் விளையாடும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தந்தையுடன் அவர் கேம்ஸ் விளையாடும் புகைப்படத்தை ட்ரெண்ட் செய்து வருகின்றனர் தளபதி ரசிகர்கள். சமீபத்தில் இசைப்புயல் AR ரஹ்மானின் மகன் AR அமீனுடன் சஞ்சய் பேசிய வீடியோ கால் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது. கையில் ஜாய்ஸ்டிக்குடன் சஞ்சய் விளையாடிய ஸ்டைலை பார்த்த பலர், மாஸ்டர் படத்தில் JD எனும் பாத்திரத்தில் தளபதி விஜய் விளையாடுவது போல் உள்ளது என கமெண்ட் செய்து வருகின்றனர். 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, நடித்து வெளியான படம் மாஸ்டர். மேலும் இத்திரைப்படத்தில், மாளவிகா மோகனன், சாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமே வெளியாகி இருக்க வேண்டிய இத்திரைப்படம், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திட்டமிட்டபடி வெளியாகவில்லை. இதனால் ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக ஜனவரி 13ஆம் தேதி மாஸ்டர் வெளியாகியது.

மாஸ்டர் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. தெலுங்கில் ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் வெளியான இப்படத்திற்கு முதல் நாளே நல்ல வரவேற்பு இருந்ததாக படத்தின் தெலுங்கு வினியோகஸ்தரான மகேஷ் கொனேரு அறிவித்திருந்தார். 

தமிழகத்தில் மட்டுமன்றி வெளிநாடுகளிலும் திட்டமிட்டபடியே மாஸ்டர் வெளியாகியுள்ளது. தற்போது மாஸ்டர் படம் வெளிநாடுகளில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக, மாஸ்டர் படக்குழுவினரைப் பாராட்டி சினிமார்க் மற்றும் ஏ.எம்.சி திரையரங்க நிர்வாகம் இ-மெயில் அனுப்பியுள்ளனர். இந்தக் கடினமான காலகட்டத்தில் எங்களுக்குப் பொக்கிஷமாகப் படம் கொடுத்து உதவி புரிந்தமைக்கு நன்றி. இந்தச் சிக்கலான காலகட்டத்தில் இவ்வளவு காலம் காத்திருந்து திரையரங்க வெளியீட்டை மட்டுமே முன்னிலைப்படுத்தி வெளியிட்டுள்ளதற்கும் நன்றி என்று தெரிவித்திருந்தனர்.

இது மட்டுமின்றி மாஸ்டர் திரைப்படம், இந்தியில் ரீமேக் ஆகவுள்ளது. தளபதி விஜய் நடிப்பில் பொங்கல் பண்டிகைக்குத் திரைக்கு வந்துள்ள மாஸ்டர் திரைப்படத்தின் இந்தி ரீமேக் உரிமையை எண்டெமால் சைன் இந்தியா நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இது தொடர்பாக எண்டெமால் சைன் இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அபிஷேக் ரெகே கூறியிருப்பதாவது: மாஸ்டர் படத்தின் இந்தி ரீமேக் உரிமையை வாங்கியதில் எங்களுக்குப் பெருமை. தமிழில் இந்தப் படம் உருவாக்கிய மாயாஜாலத்தை இந்தி ரசிகர்களை ஈர்க்குமாறு நாங்கள் மீண்டும் உருவாக்குவதை ஆர்வத்துடன் எதிர்நோக்கியிருக்கிறோம் என்று அவர் கூறியிருந்தார்.