தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நாயகராக ஜொலிக்கும் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் - விஜய் கூட்டணி தளபதி 67 திரைப்படத்திற்காக இணைகிறது. ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் தளபதி 67வது திரைப்படத்தின் அறிவிப்புகள் வரும் டிசம்பர் மாதம் முதல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே முதல்முறையாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் தற்போது நடித்து வரும் திரைப்படம் வாரிசு. ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க, ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷ்யாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், குஷ்பூ, சங்கீதா க்ரிஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் வாரிசு திரைப்படத்திற்கு தமன்.S இசையமைக்கிறார். 

வாரிசு திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், அடுத்த ஆண்டு(2023) ஜனவரியில் பொங்கல் வெளியீடாக வாரிசு திரைப்படம் ரிலீஸாகவுள்ளது. முன்னதாக ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் விழா நாட்களில் நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும் என தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனையடுத்து தெலுங்கு தயாரிப்பாளர் சங்கத்தின் இந்த முடிவை மாற்றக் கோரி தமிழ் திரைப்பட இயக்குனர்கள், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்தனர். தொடர்ந்து தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கமும், தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் இது குறித்து முறையிட்டது. இந்நிலையில் தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் தங்களது முடிவை மாற்றிக் கொண்டதாகவும் திட்டமிட்டபடி வாரிசு படம் தெலுங்கிலும் எதிர்பார்த்த படி ரிலீஸ் ஆகும் என தென்னிந்திய தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் தற்போது அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.