இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திர நடிகர்களில் ஒருவராக விளங்கும் தளபதி விஜய் நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள திரைப்படம் பீஸ்ட். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்க,  செல்வராகவன், டாம் ஷைன் சாக்கோ, யோகிபாபு, அபர்ணா தாஸ், சதீஷ் கிருஷ்ணன், ரெட்டின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவில் R.நிர்மல் படத்தொகுப்பு செய்துள்ள பீஸ்ட் படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். வருகிற ஏப்ரல் மாதம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ள பீஸ்ட் திரைப்படத்தின் முதல் பாடலாக அரபிக் குத்து பாடல் கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தன்று வெளியானது.

"ஹலமித்தி ஹபிபோ" என தொடங்கும் இந்த பாடல் அனைத்து தரப்பு வயதினரையும் கவர்ந்து வைரல் ஹிட் அடித்துள்ளது. தளபதி விஜய்யின் ஸ்டைலான நடனமும் அனிருத்தின் அசத்தலான இசையும் இணைந்து விருந்தாக வெளிவந்த இந்தப் பாடல் இதுவரை யூட்யூபில் 41 மில்லியன் பார்வையாளர்களை கடந்து 50 மில்லியன் இலக்கை வெகுவிரைவில் தொடும் வேகத்தில் சூப்பர் ஹிட்டாகியுள்ளது.

இந்நிலையில் பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடல் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. ஸ்பாட்டிஃபை தளத்தில் உலக அளவில் ட்ரெண்ட் ஆகியுள்ள 200 பாடல்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் நுழையும் முதல் இந்திய பாடலான அரபிக் குத்து வெறும் 48 மணி நேரத்தில் இந்த சாதனையை செய்தது குறிப்பிடத்தக்கது.