தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டாராக திகழும் மகேஷ்பாபு இன்று செய்த ஒரு பேருதவி அவரை இன்னும் உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளது. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தொடர்ந்து கதாநாயகனாக களமிறங்கி இன்று தெலுங்கு சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகராகவும் சூப்பர்ஸ்டார் ஆகும் வளர்ந்து நிற்கிறார்.

நடிகர் மகேஷ்பாபு ஆறு வருடங்களுக்கு முன்பு ஆந்திராவில் இரண்டு கிராமங்களை தத்தெடுத்தார்.புர்ரிபலம் , சித்தாப்புரம் ஆகிய இரண்டு கிராமங்களை தத்தெடுத்து அந்த கிராமங்களுக்கு தேவையான உதவிகளை கடந்த 6 வருட காலமாக தொடர்ந்து செய்து வருகிறார். இந்தக் கொரோனா காலகட்டத்தில்  இந்த கிராமங்களுக்கு உதவும் வகையில் தனது தந்தையும் தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகருமான திரு.கிருஷ்ணா அவர்களின் 78வது பிறந்த நாளான இன்று புர்ரிபலம் கிராமத்திற்கு  மிகப் பெரிய உதவியை செய்துள்ளார். 

புர்ரிபலம் கிராமத்தில் வசிக்கும் மக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் விதமாக  அந்த கிராமத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் ஒரு முகாம் அமைத்து இலவசமாக  அந்த கிராம மக்கள் அனைவருக்கும் தேவையான தடுப்பூசிகளை வழங்கி அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வழிவகை செய்து இருக்கிறார் நடிகர் மகேஷ்பாபு.  

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகர் மகேஷ்பாபு, நம் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்ப தடுப்பூசி உதவும் என்றும்,எனவே  தத்தெடுத்த புர்ரிபலம் கிராமத்திற்கு ஒரு சிறு உதவியாக அனைவரையும் தடுப்பூசி எடுத்துக் கொள்ள இந்த முகாம் உதவியதாகவும் தெரிவித்து இதற்கு உதவியாக இருந்த தனியார் மருத்துவமனைக்கு நன்றியும் தெரிவித்திருக்கிறார். நடிகர் மகேஷ் பாபுவின் இந்த செயல் நாடு முழுக்க பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.